August 20, 2015

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடரும் நல்லாட்சியுடன் கூடிய தமிழர் கைதுகள்!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசாங்கம் குறித்த தகவல்கள் வெளியாகிய நாளான நேற்று முன்தினம் 18 ஆம் திகதி மூன்று தமிழ் இளைஞர்களும், தமிழ் யுவதி ஒருவரும்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நல்லாட்சிக்கான உறுதிமொழியை வழங்கி நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நால்வரும் அதி உயர் பாதுகாப்புள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் இருந்து ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் இருவர் ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரால்  கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்த போது  மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பை சேர்ந்த 36 வயதான ராஜ்குமார், வடகிழக்கின் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 19 வயதான கங்காதரன் சரண்யா ஆகியோர் கட்டாருக்கான விமானத்தில் புறப்படவிருந்த போது நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ராஜ்குமார் இத்தாலி ஊடாக மோல்டாவிற்கு செல்ல முயற்சித்துள்ளதாகவும் சரண்யா சுவிட்ஸர்லாந்திலுள்ள தனது கணவருடன் இணைந்துகொள்ளும் நோக்குடன் சென்றதாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போலி ஆவணங்களுடன் பயணத்தை மேற்கொண்டதாக சரண்யா மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரினால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 1 ஆம் திகதி வரை இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதான குருநாதன் நிருஷன் மற்றும் மேல் மாகாணத்தின் ராகம பகுதியைச் சேர்ந்த ப்ரட்ரிக் லோரன்ஸ் ஆகியோர் கடந்த 16 ஆம் திகதி துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போலியான ஆவணங்களுடன் பயணத்தை மேற்கொண்டதாக இருவருக்கு எதிராகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பிலுள்ள உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் இந்த நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment