July 5, 2014

ஈழ சகோதரி நந்தினியின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்குங்கள் பாரிவேந்தர் அவர்களுக்கு இயக்குநர் வ. கெளதமன் கடிதம்

மதிப்பிற்குரிய கல்விப் பெருந்தகையீர் அய்யா பாரி வேந்தர் அவர்களுக்கு வணக்கம்!

அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும்,  ஈழத்தமிழ் மாணவி என்ற ஒரே
காரணத்திற்காக மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை நம் ஈழ சகோதரி நந்தினி.

இலங்கையில் இருந்து அகதிகளாய் தமிழகத்தை நாடி வரும் சகோதர, சகோதரிகள் பல ஆயிரம் பேர். அப்படி 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாய் வந்த குடும்பத்தை சேர்ந்தவரான நந்தினி ஈரோடு மாவட்டம், அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். 

மாணவி நந்தினி பிளஸ் 2 தேர்வில் 1170 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருந்தார். மேலும், அவர் 197.5 கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அதனால், எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்திருந்தார். 

ஆனால், தரவரிசைப் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. அதற்கான காரணமாக அவர் ஈழத்தமிழ் மாணவி என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 84ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த குழந்தைகளுக்கு மருத்துவத்தில் 20, பொறியியலில் 25, வேளாண்மை 10, பாலிடெக்னிக் 40, சட்டக் கல்லூரியில் 5 இடங்கள் என மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தது. 

1993 ஆம் ஆண்டில் இந்த இட ஒதுக்கீடு சலுகை ரத்து செய்யப்பட்டது. இந் நிலையில் 1996 ஆம் ஆண்டில் இவ்விட ஒதுக்கீடு மீண்டும் அமல் படுத்தப் பட்டது. 

தமிழ்நாட்டில் உள்ள 110 அகதிகள் முகாம்களை சேர்ந்த 687 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 604 தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 26 மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  1996 இடஒதுக்கீட்டில் கவிஞர் காசி ஆனந்தன் மகள் மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளால் இவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த போதும் இப்போது மருத்துவ கல்வி மட்டும் எட்டா தூரத்தில் உள்ளது  வருத்தமளிக்கிறது.

நான் மருத்துவரானால்  உடல் ஊனமுற்று வாழ்கிற எம் மக்களை காப்பாற்றுவேன் என்ற பெருங் கனவோடு வாழ்ந்தார். அந்த கனவு நனவாகும் நிலையில் இல்லை. எத்தனையோ மாணவர்களுக்கு கல்வி கண்களை திறந்த நீங்கள் உங்கள் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வாயிலாக இந்த மாணவியின், நமது சகோதரியின் மருத்துவக் கனவை நிறைவேற்றினால் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றுகிற உயர்ந்த சேவையாக நாங்கள் எண்ணி மகிழ்வோம்.

உங்கள் கல்விக் கருணையால் நந்தினியின் கனவை நனவாக்குங்கள்!
நம்பிக்கையுடன்

வ.கெளதமன்

No comments:

Post a Comment