July 5, 2014

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள் வெற்றி!

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள் அகில இலங்கை மட்ட நடனப்போட்டிகளில் சாதனை!

இலங்கை சங்கீத நடன மற்றும் பேச்சுக் கழகத்தின் (Srilanka Festivel of Music Dance and Speech Forum) வருடாந்த அகில இலங்கை மட்ட போட்டிகள் மே மாதம் 20ம் 21ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றிருந்தன.
இதில் வவுனியா வலுவுட்டல் வளாகத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களது 2 நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அகில இலங்கை மட்டத்தில் விசேட தேவையற்ற மாணவர்களிற்கு இணையாக பங்குபற்றி போட்டியிட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தகு விடயமாகும்.
அவர்களில் ரமேஸ் தியாகராஜா என்கின்ற மாணவர் மேலத்தேய தனி நடனப்போட்டியில் முதலிடத்தை வென்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். மேலைத்தேய குழு நடனப்போட்டியில் ஜான்சினி புஸ்பராஜா, லதுர்சிகா சிவனேசன், கரன் சந்திரசேகர், டிலக்சன் யோகேஸ்வரன் ஆகிய நால்வரும் பங்குபற்றி முதலிடத்தை வென்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.

2000ம் ஆண்டில் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களது கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்காக வவுனியா மாவட்டத்தில தேக்கவத்தையில் “சீட்” நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட வலுவுட்டல் வளாகமானது கேட்டல் பேச்சு சிரமமுடைய மாணவர்கள், கற்றல் சிரமமுடையவர்கள் மற்றும் பல்வேறு விதமான உடல், உள நடத்தை பிறழ்வுகளை உடைய மாணவர்களிற்கு தனது சேவையினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இவ்வளாக மாணவர்களின் 4 நிகழ்வுகள் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. மேற்குறிப்பிடப்பட்ட 2 நிகழ்வுகளும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்று அகில இலங்கை மட்ட போட்டிகளிற்கு தெரிவாகி இருந்த அதேவேளை மற்றைய 2 நிகழ்வுகளும் மாவட்ட மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அகில இலங்கை மட்ட வெற்றிகள் விசேட தேவைக்குட்பட்டவர்களின் திறமைகளிற்கான ஒரு அங்கீகாரமாக அமைவதோடு சாதிப்பதற்கு விசேட தேவை ஒரு தடையல்ல என்பதையும் மீள வலியுறுத்தி நிற்கின்றது.

No comments:

Post a Comment