வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்கள் ஐதேக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐதேகவின் வேட்பாளர் பட்டியலில், மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று கையெழுத்திட்டார்.
இந்த தகவலை பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே, மகிந்தவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றொரு மூத்த உறுப்பினரான ஜனக பண்டார தென்னக்கோன் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இவர் நாளை ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனக பண்டார தென்னக்கோன் ஏற்கனவே மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றொரு முக்கிய உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே, அரசியலை விட்டே விலக முடிவு செய்துள்ளார்.
அவர் தாம் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment