அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கடுமையான பாடம் நடத்தப்பட்டதாக அறியவந்துள்ளது என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, இனப்படுகொலை என்ற சொல்லாட்சி விடயத்தை மென்மைப்படுத்துமாறும், நல்லிணக்கம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி விடயங்களில் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், நல்லிணக்கம், மீள்கட்டுமானம், புனர்வாழ்வு விடயங்களில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், நிஷா பிஸ்வால் எடுத்துக் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment