July 12, 2015

அவுஸ்திரேலிய கனவு கலைந்த இலங்கையரின் துயரத்துக்கு கிடைத்துள்ள தீர்வு!

இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில், உள்ளூரில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலிருந்தும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பி அவுஸ்திரேலியாவுக்கு சென்று வாழ முயன்று தோற்றுப் போனவர்கள் பலர், பல்வேறு துயரங்களுக்கு நடுவே மீண்டும் சொந்த ஊர்களில் வாழ்க்கையைத் தொடங்க முயன்று வருகின்றனர்.
அப்படியானவர்களில் ஒருவர் தான் வைத்திலிங்கம் லிங்கராஜன். யாழ் குடாநாட்டின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள கட்டைக்காடு என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மீனவர். ஆஸ்திரேலியா செல்லும் கனவு கலைந்துபோன நிலைமையில் பெரும் கடன்சுமையில் சிக்கியிருந்தார்.
இப்போது கொடையாளி ஒருவரின் நீண்டகால கடனுதவி மூலம் உள்ளூரிலேயே தொழில் ஒன்றை நம்பிக்கையோடு ஆரம்பித்திருக்கின்றார் லிங்கராஜன்.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆபத்தான கடல் பயணம் ஒன்றை மேற்கொண்ட லிங்கராஜன் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
27 இலங்கையர்கள் உட்பட 1500க்கும் மேற்பட்டவர்களுடன் பப்புவா நியுகினியிலுள்ள மனுஸ் தீவில் சுமார் இரண்டு ஆண்டுகள் கடுமையான கட்டுப்பாடுகளின் நடுவே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மனமும் உடலும் சோர்ந்த நிலையில், பின்னர் அங்கிருந்து ஐஓஎம் என்ற சர்வதேச குடிபெயர்வு தொடர்பான தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி சொந்த ஊருக்குத் திரும்பினார்.
தொழில் இல்லாமலும் வறுமையினாலும், நான்கு பிள்ளைகளையும் மனைவியையும் பராமரிக்க முடியாமல் சிரமப்பட்ட லிங்கராஜன், அவுஸ்திரேலியா செல்வதற்காக வாங்கிய பெருந்தொகை கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும் துயரப்பட்டார்.
இந்த நிலையில், லிங்கராஜனின் துயரம் பற்றிய செய்தியை பிபிசி தமிழோசை ஊடாக அறிந்துகொண்ட நோர்வேயில் வாழும் இலங்கைத் தமிழரான ஞானேஸ்வரன் என்பவர், அவருக்கு நீண்டகால அடிப்படையில் கடனுதவியை வழங்கி உதவ முன்வந்துள்ளார்.
அதன்படி, புதிய மீன்பிடி படகு, அதற்கான இயந்திரம், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் வாங்குவதற்கான பெருந்தொகை நிதியை ஞானேஸ்வரன் வழங்கி உதவியுள்ளார்.
ஊர்மக்கள் முன்னிலையில் இன்று தனது புதிய படகை கடலில் இறக்கியுள்ள லிங்கராஜன் தொழிலை நம்பிக்கையோடு ஆரம்பித்துள்ளார்.

No comments:

Post a Comment