July 12, 2015

தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம்!

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாக யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031ம் ஆண்டில் 10.3 வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் குறிப்பிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜுலை 11ம் திகதி உலக குடித்தொகை தினத்தை ஒட்டி இலங்கையில் தமிழர்களின் எதிர் கால இருப்பு தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
யுத்தம், மீள்குடியேற்ற மறுப்பு, குற்றங்களுக்கான நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்படாமை, திட்டமிட்ட பாரபட்சங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்படும் இனமாக இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் உலகத்தில் போருக்கு பின்னர் உச்சக்கட்டமான சனத்தொகை வளர்ச்சி பெற்ற நாடுகள், அல்லது பிரதேசங்கள், போன்று வடகிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னர் சனத்தொகை வளர்ச்சியடையவில்லை.
வடகிழக்கு மாகாணங்களில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதற்குமேல் வடகிழக்கு மாகாணங்களில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை மிக அதிகம். இதற்கும் போர், காணாமல்போதல், இறப்பு போன்றன காரணங்களாகும்.
இந்நிலையில் ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையை சமப்படுத்துவதற்கான எவ்விதமான செயற்பாட்டு திட்டங்களும் எம்மிடம் இல்லை. இதேபோன்று சனத்தொகை அதிகரிப்பதற்கான திட்டங்களும் எங்களிடம் இல்லை.
ஆனால் சனத்தொகை அதிகரிப்பை செய்யவேண்டிய கட்டாயத்தில் இன்றைய நிலையில் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சனத்தொகை அதிகரிப்பிற்கு முதலில் நாங்கள் செய்யக்கூடிய விடயம் என்னவென்றால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள காலம் தாழ்த்திய திருமணங்களை நிறுத்தவேண்டும்.
இலங்கையில் காலம் தாழ்த்திய திருமணங்களில் தமிழர்களே முதலிடத்தில் உள்ளார்கள். அதிலும் யாழ்ப்பாணம் முதலாவது இடத்தில் இருக்கின்றது.
குறிப்பாக தமிழ் ஆண்கள் 27.4 வீதமாகவும், தமிழ் பெண்கள் 24.4 வீதமாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த வீதத்தின் அடிப்படையில் சிங்களவர்கள் சற்று குறைவாகவும், அதனை விட குறைவாக முஸ்லிம்களும் உள்ளனர்.
அதாவது அவர்கள் உரிய வயதில் திருமணம் செய்கிறார்கள். நாங்கள் உரிய வயதில் திருமணம் செய்ய முடியாமைக்கு, பல காரணங்கள் இருக்கின்றன.
குறிப்பாக பொருளாதாரம், சீதனம், சாதி மத பிரச்சினை, பிர தேசவாதம் உள்ளிட்ட பல சிக்கல்கள் எங்கள் சமூகத்தில் இருக்கின்றன.
குறிப்பாக அது தற்போது மேலும் அதிகரித்திருக்கின்றது. எனவே இவைகள் முதலில் களையப்படவேண்டும். கால தாமதமான திருமணங்கள் சனத்தொகை வளர்ச்சியை மட்டுமல்லாமல், பிறக்கும் அடுத்த சந்ததியையும் பல்வேறு வகையில் பாதிக்கின்றது.
குறிப்பாக மந்தபோசனை உள்ள குழந்தைகள், உளப்பாதிப்புள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. எனவே ஆரோக்கியமான சமூகத்திற்கும், சனத்தொகை வளர்ச்சிக்கும் சிறந்ததாகும்.
இதேவேளை யுத்த சூழ்நிலைகள் உருவாக முன்னர் எங்கள் சமுகத்தில், குழந்தைகள் எண்ணிக்கை 4.1ஆக இருந்தது. அதாவது ஒரு குடும்பத்தில் 4ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தது. ஆனால் அது படிப்படியாக குறைவடைந்து 2003ம் ஆண்டு 2.1ஆக இருந்ததுடன், 2005ம் அண்டில் 2.3 ஆக மாறி போருக்கு பின்னர் 2011ம் ஆண்டில் 2.4 ஆக காணப்பட்டது. எனவே இந்த அளவு போதாது,.
முஸ்லிம்கள் 3.3ஆக காணப்படுகின்றார்கள். சிங்களவர்களும் அதிகம். இந்நிலை தொடர்ந்தால் 2012ம் ஆண்டில் 11.2வீதமாக இருந்த தமிழர்கள் 2021ம் ஆண்டில் 10.8 வீதமாகவும், 2031 ம் ஆண்டில் 10.3 வீதமாகவும், 2041ம் ஆண்டில் 9.8 வீதமாகவும் வீழ்ச்சியடையும் நிலை வரும்.
இதே நிலையில் 2012ம் ஆண்டு 74.9 வீதமாக இருந்த சிங்களவர்கள், 2041ம் ஆண்டு 100 வீதமாகவும், 2012ம் ஆண்டில் 9.2 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 2041ம் ஆண்டில் 11.7 வீதமாகவும் மாறும் அபாயம் உள்ளது.
தென்னிலங்கையில் சனத்தொகை வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் ஊக்குவிப்பு வடகிழக்கு மாகாணங்களுக்கு இல்லை.
மாறாக கட்டாய கருத்தடைகளும் சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுமே தொடர்கின்றது. குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் மட்டும் 16 வீதமானவர்கள் வறுமையில் உள்ளனர்.
இலங்கையில் மந்தபோசனை உள்ள குழந்தைகள் உள்ள மாவட்டங்களில் வவுனியா 51 வீதம். யாழ்ப்பாணம் 41வீதம். இலங்கையில் சனத்தொகை குறைந்த மாவட்டங்களாக முல்லைத்தீவும், மன்னாரும் மாறுகின்றது.
எனவே இவற்றை, நிவர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. இந்நிலையில் தமிழர்கள் காலம் தாழ்த்திய திருமணங்களை முழுமையாக நிறுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும்.
பெண்கள் தொகை ஆண்கள் தொகையுடன் சமப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment