June 14, 2015

குடியமர்ந்த மக்களிற்கு எதுவுமே கிட்டவில்லை! சஜீவன் குற்றச்சாட்டு!

கடந்த 25 வருடங்களின் பின்னர் அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக பல தரப்பினர்களும் வாக்குறுதி வழங்கியிருந்த போதும் மூன்று மாதங்கள் கடந்த
நிலையிலும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இங்கு மீள்குடியேற்றத்திற்காக பல மில்லின் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் அறிவித்திருக்கின்ற நிலையில் அந்த நிதி எங்கு , யாருக்கு செலவிடப்படுவதாக கேள்வியெழுப்பி இருக்கின்றார் சஜீவன்.

அத்துடன் வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவரான அவர் மீள்குடியமர்ந்த மக்களிற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீண்டகாலமாக முகாம்களில் வசித்து வருகின்ற மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக் குடியமர்த்த வேண்டுமெனத் தொடர்ச்சியாகக் கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆயினும் கடந்த அரசாங்கம் இதற்குரிய எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே இருந்து வந்தது. இந் நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விடப்பட்டு அங்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதற்கமைய அடிப்படை வசதிகள் எவையுமற்ற நிலையில் பல குடும்பங்கள் குடியமர்ந்துள்ளன. இவ்வாறு மீளக் குடியமரும் குடும்பங்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக பலரும் வாக்குறுதி வழங்கியிருந்த போதும் இதுவரையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையே இருக்கின்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான நிலையில் அங்கு பல அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் சென்று வருகின்றனர். இதன் போது பல வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வீடு மற்றும் மலசல கூட வசதி உள்ளிட்ட வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுப்பதாக அரச அதிகாரிகளால் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. 

ஆயினும் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதும் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதே நோரம் வேறு யாரும் உதவிகளையும் செய்யவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் தற்போதும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  இவ்வாறு அடிப்படை வசதிகளற்ற நிலையில் அங்குள்ள மக்கள் பெரும்  துன்பங்களை அனுபவித்து வருகின்ற போது மீள்குடியேற்ற அமைச்சு மீள்குடியேற்றத்திற்கு பல மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

ஆனால் இங்கு மீள்குடியமர்ந்த மக்களுக்கு வெறுமனே 13 ஆயிரம் ரூபா மட்டுமே மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்டது. இதனைத் தவிர பண உதவியோ அல்லது ஏனைய உதவிகளோ எவையும் வழங்கப்படவில்லை. ஆகவே இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு அடிப்படை உதவிகளையாவது விரைவாக வழங்க வேண்டுமென்றும் சஜீவன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment