June 14, 2015

நினைவில் நீங்காத துரோகம்! கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்!

 இறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதது.


தமிழீழ தாயகத்தின் பெரும்பாலான நிலப்பகுதிகளை விழுங்கி, முள்ளிவாய்க்கால் கடலோரத்தை எல்லையாகக் கொண்ட வன்னி கிழக்கின் சிறியதொரு நிலத்துண்டுக்குள் நான்கரை இலட்சம் தமிழர்களை நெருக்கித் தள்ளித் தமிழ்க் குருதியில் சிங்களம் திளைத்த பொழுது உண்ணாநோன்பு நாடகம் ஆடிச் செப்படி வித்தை காட்டியவர் முத்துவேலரின் புதல்வர்
அவருக்கு மேலே ஒரு படி சென்ற அவரது வழித் தோன்றலான கனிமொழி, ஈழமண்ணில் தமிழ்க் குருதி சொரியும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் “உறங் கிக் கொண்டிருக்க முடியாது’ என்று மேடைகளில் ஆவேசமாக முழங்கிக் கொண்டு, மறுமுனையில் ஆயுதங்களைக் கீழே போட்டு சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கடும் அழுத்தம் பிரயோகித்தவர்.
கடைசி வரை கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த மக்களினதோ, அன்றி சிங்களப் படைகளை எதிர்கொண்டு உயிரை வேலியாக்கிப் போராடிக் கொண்டிருந்த போராளினதோ உயிர்களைக் காப்பதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைக ளையும் எடுக்கவில்லை. மாறாக ஆயுதங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கீழே போட்டு சிங்கள அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்வந்தால் மக்களினதும், போராளிகளினதும் உயிர்களைக் காப்பதற்கு இந்தியா நட வடிக்கை எடுக்கும் உத்தரவாதத்தை மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அள்ளிவீசிய வண்ணம் இருந்தார்கள்.
இது தொடர்பாகக் கனிமொழி அவர்களால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்களை கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் தொடக்கம் ஐம்பது வாரங்களுக்குத் தொடர் கட்டுரையாக ஈழமுரசில் வெளியி டப்பட்ட “தந்திரிகளின் மறுமுகம்’ என்ற பத்தியில் நாம் அம்பலப்படுத்தியிருந்தோம். அன்றைய சந்தர்ப்பத்தில் கனி மொழி அவர்கள் வாய் திறக்கவேயில்லை. ஆனால் இப்பொழுது நான்கு ஆண்டுகள் கடந்த பின்னர் கனிமொழி அவர்கள் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார். அதுவும் நான்காம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவரும், பின்னர் தமிழீழ அரசியல்துறையின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளராகத் திகழ்ந்தவருமான எழிலன் அவர்கள் கனிமொழியுடன் செய்கோள் தொலைபேசி ஊடாக உரையாடிய பின்னரே சிங்களப் படைகளிடம் சரணடைந்தார் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலும், “த இந்து’ என்ற நாளிதழிற்கு வழங்கிய செவ்வியிலும் அவரது துணைவியாரான வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் அறிவித்ததை அடுத்தே கனிமொழி அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார்.
தான் செய்தது தவறு என்றும், அதற்காக வருந்துவ தாகவும் ஒருவேளை கனிமொழி அவர்கள் கூறியிருந்தால் அவர் மீது எம்மவர்களில் பலர் அனுதாபம் காட்டியிருக்க கூடும். “நடந்தது நடந்து விட்டது. இப்பொழுதாவது தனது தவறைக் கனிமொழி உணர்ந்துள்ளாரே. அதற்காக அவ ரைப் பாராட்டியாக வேண்டும். கனிமொழிக்கு துரோகப் பட்டம் கட்டுவதால் எதனையும் நாம் சாதிக்க முடியாது. எனவே அவர் இழைத்த தவறை மறந்து பெருந்தன்மையோடு நடப்போம். அதுதான் அரசியல் சாணக்கியத்தனமா னது’ என்று கூறுவதற்கு எம்மவர்களில் பலர் போட்டி போட் டுக் கொண்டு வந்திருப்பார்கள். இதை வலியுறுத்திக் கூறுவ தற்காகவே சிலர் பத்திரிகை அச்சிட்டு அனுதாபக் கட்டுரை கூட வெளியிட்டிருப்பார்கள்.
இறுதிப் போரில் சிங்களத் தரைப்படைத் தளபதியாக விளங்கிய சரத் பொன்சேகாவையும், பதில் படைத்துறை அமைச்சராக விளங்கிய மைத்திரிபால சிறீசேனவையும் மன்னித்த எம்மவர்கள், முத்தமிழ் வித்தகர் என அறியப் பட்ட கருணாநிதியின் புதல்வியையா மன்னிக்க மாட்டார் கள்?
நல்ல வேளையாகத்தான் புரிந்த தவறைக் கனிமொழி ஒப்புக் கொள்ளவோ, அன்றி அதற்காகக் குறைந்தபட்சம் வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. மாறாக, “யார் அந்த சசிதரன் என்கிற எழிலன்? அப்படி ஒருவரை எனக்குத் தெரியாதே! அவர் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பி னர்களில் ஒருவராக இருந்திருந்தால் எனக்கு அவரைத் தெரிந்திருக்கும். சாதாரண உறுப்பினர் என்றால் எனக்கு எப் படித் தெரியும்? அப்படி ஒருவரையே எனக்குத் தெரியாது எனும் பொழுது அவரைச் சரணடையுமாறு செய்கோள் தொலைபேசியில் நான் எப்படிக் கூறியிருப்பேன்?’ என்றெ ல்லாம் கனிமொழி கதை அளந்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு அரங்கேற்றி ஆறு ஆண்டுகள் கடந்திருப்பதால் எழிலன் என்ற பெயரில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன் னணி உறுப்பினரைக் கனிமொழி மறந்துவிட்டாரோ தெரிய வில்லை. அல்லது இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைய வைக்கப்பட்டுக் காணாமல் போனவர் ஆக்கப் பட்ட எழிலன் இனியும் திரும்பி வரப்போவதில்லை என்று 2009ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அலரி மாளிகையில் கனி மொழியைச் சந்தித்த பொழுது ஏதாவது உத்தரவாதத்தை மகிந்த ராஜபக்ச வழங்கினாரோ தெரியவில்லை.
இவை பற்றியயல்லாம் ஆராய்ச்சி செய்வது எமது நோக்கமன்று. இறுதிவரை எழிலன் அவர்களுடன் கூடவிருந்து, சிங்களப் படைகளால் அவர் கொண்டு செல்லப்படுவதை நேரில் கண்டவர் என்ற வகையில், கனிமொழியுடன் எழிலன் அவர்கள் தொலைபேசியில் உரையாடியது தொடர் பாக அனந்தி அவர்கள் விடுத்திருக்கும் அறிவித்தல் உண்மையானதும், நம்பகமானதும் என்றே நாம் கருத வேண்டும். தவிர தனது துணைவர் தொலைபேசியில் உரையாடாத ஒருவருடன் அவர் உரையாடியதாகப் பொய்யுரைக்க வேண்டிய தேவை அனந்தி அவர்களுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே பொய்யுரைப்பது கனிமொழியே தவிர அனந்தி அல்ல என்பதே சரியான பார்வையாக இருக்கும்.
சரி, எழிலன் அவர்களுடன் கனிமொழி தொலைபேசியில் உரையாடவில்லை என்றே வைத்துக் கொள் வோம். சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு எழிலன் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவருக்கும் தான் அறிவுரை கூறவில்லை என்று கனிமொழி கூறுவதையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியயன்றால் ஆயுதங்களை கீழே போடுமாறு வலியுறுத்தித் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு தான் எழுதிய இரண்டு மின்மடல்களுக்கும் என்ன விளக்கத்தைக் கனிமொழி அளிக்க போகின்றார்?
இதனைக் கனிமொழி அவர்களுக்கான சவாலாகவே விடுகின்றோம்.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி சிங்களப் படைகளின் முற்றுகைக்கு உள் ளாகியிருந்த 29.03.2009, 30.03.2009 ஆகிய நாட்களில் கனிமொழி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பா.நடேசன் அவர்கள் அவசர செய்தியயான்றை அனுப்பியிருந்திருந் தார். 29ஆம் நாளன்று பா.நடேசன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியைத் திறக்க முடியவில்லை என்று கனி மொழி அவர்கள் கூறியதை அடுத்து, அதே செய்தியை 30ஆம் நாளன்றும் பா.நடேசன் அனுப்பினார்:
“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,
தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின் றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத் தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அர சின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென் றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண் ணம் உள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பா வும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத் தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப் பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.
நன்றி,
என்றும்
உங்கள் அன்பான,
சகோதரன் பா.நடேசன்“
இம்மின்மடலுக்கு உடனடியாக அப்பொழுது எந்தப் பதிலையும் கனிமொழி அவர்கள் அனுப்பவில்லை. ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பிடம் சிங்களப் படைகளின் முற்றுகைக்கு ஆளாகியிருக்கும் செய்தி அப்பொழுது உளவு வட்டாரங்களில் கசிந்திருந்தது. அன்று இந்திய மத்திய அரசாங்கத்தில் அச்சாணியாக விளங்கிய கருணாநிதியையும், அவரது புதல்வி கனிமொழியையும் அத்தகவல் சென்றடைந்திருந்தாலும்கூட நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சிறீசபாரத்தினம் மீதும், பத்மநாபா மீதும் ஆறாத அன்பும், எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பைப் பெற்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் கொண்ட கருணாநிதி, இதுதான் தலைவர் பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கான சந்தர்ப்பமாக எண்ணியிருந்தாலும்கூட நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
ஆனால் தமது உயிரை வேலியாக்கி ஆனந்தபுரம் பகுதியில் இருந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்களைப் பத்திரமாக வேறு இடத்திற்குப் போராளிகள் நகர்த்தியதை அடுத்து, மீண்டும் கனிமொழி களமிறங்கினார். ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான உத்தரவாதத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அளித்தால், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கும் என்ற தொனியில் 07.04.2009 அன்று கனிமொழியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு ஆங்கிலத்தில் இரண்டு மின்மடல்கள் அனுப்பப்பட்டன.
அவற்றில் முதலாவது மின்மடலின் தமிழாக்கம் பின்வருமாறு:
“நடேசன் அண்ணன்,
நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்.
கனிமொழி”
இங்கு உள்துறை அமைச்சர் என்று கனிமொழி குறிப்பிட்டது பா.சிதம்பரம் அவர்களை. ரஜீவ் காந்தியின் காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளைக் கழுத்தறுத்து, தமிழீழ மக்களின் வாழ்வை சின்னாபின்னமாக்க முற்பட்ட சிதம்பரத்தை, தமிழீழ மக்களின் மீது கரிசனை கொண்டவராக கனிமொழி வர்ணித்தது வேடிக்கையானது.
எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கூடத் தெரிவிக்காது 1987ஆம் ஆண்டு தை மாதம் தமிழகத்தில் இருந்து இரகசியமாக தமிழீழத்திற்குத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திரும்பிச் சென்றதை அடுத்து, தலைவர் அவர்களுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அவர்களைத் திருப்பி விடுவதற்குப் பகீரத பிரயத்தனம் செய்து, அதில் தோல்வி கண்டவர் பா.சிதம்பரம். இது தொடர்பாக தான் எழுதிய ?விடுதலை? எனும் நூலில் சிதம்பரத்தை ?சகுனியார்? என்று வர்ணித்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியுள்ளார். இது கனிமொழிக்குத் தெரியவில்லை போலும். அதனால்தான் சிதம்பரத்தின் திருகுதாளங்களை நன்கு அறிந்த பா.நடேசன் அவர்களுக்குக் பா.சிதம்பரத்தை ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக வர்ணித்துக் கனிமொழி கடிதம் எழுதினாரே தெரியவில்லை.
அடுத்தது “தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்“ என்று கனிமொழி குறிப்பிட்டது பழ.நெடுமாறன் அவர்களையே என எண்ண வேண்டியுள்ளது. ஏனென்றால் நீண்ட காலமாகவே பழ.நெடுமாறன் அவர்களுக்கு நெருக்கமானவராகத் தமிழீழ தேசியத் தலைவர் திகழ்ந்தது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த உண்மை. 23.07.1997 அன்று பழ.நெடுமாறன் அவர்களுக்குத் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றில்கூட, கருணாநிதியின் இரட்டைப் போக்குத் தொடர்பான தனது ஆதங்கத்தை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெளியிட்டிருந்தார்:
“அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய அண்ணாவிற்கு,
நான் நலமேயுள்ளேன். அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இங்கு இப்போது மருந்துப் பொருட்களுக்குத் தான் பெரிய தட்டுப்பாடு. அண்ணா நீங்கள் அருட் பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்துப் பொருட்கள் எமக்குக் கிடைத்தன. நான் அதற்குரிய ஒரு நன்றிக் கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன். அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள். மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை ஐம்பது லட்சம் வரையான பணம் தமிழ் நாட்டு பொலீசாரிடம் பிடிபட்டுள்ளது. எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக் கஸ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம் தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது. ஆனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது மருந்துப் பொருட்கள் தான். தொடர்ந்தும் இது போல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா. அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.
இப்படிக்கு
வே.பிரபாகரன்.”
இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பழ.நெடுமாறன் அவர்களை ??வலியின்றிப் புலிக் கூட்ட முதுகினிலே குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத்துரோகி?? என்று தனது தந்தை கருணாநிதி கவிதை எழுதி வசைபாடியது போதாது என்று, அவரைத் தவறான வழிகாட்டியாக வர்ணித்து பா.நடேசன் அவர்களுக்குக் கனிமொழி மின்மடல் அனுப்பியிருந்தார். அத்தோடு கனிமொழி நின்று விடவில்லை. முதலாவது மின்மடல் அனுப்பி நான்கரை மணிநேரம் கழிவதற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்திப் பா.நடேசன் அவர்களுக்கு இன்னுமொரு மின்மடலையும் கனிமொழி அனுப்பினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அம்மின்மடலின் தமிழாக்கம் பின்வருமாறு:
“நடேசன் அண்ணன்,
அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நாங்கள் எல்லோரும் கவலையடைந்துள்ளோம். சிறீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்வரும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பதைபற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள்.
நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவு செய்து டில்லியில் உள்ள ஆட்களுடன் கதைக்கவும்.
கனிமொழி.”
எழிலன் அவர்களைச் சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு தான் கூறவில்லை என்று கற்பூரம் எரித்துச் சத்தியம் செய்யும் இதே கனிமொழி, ஆயுதங்களைக் கீழே போடுமாறும், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கான உத்தரவாதத்தை வழங்குமாறும் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு என்ன வியாக்கியானம் அளிக்கப் போகின்றார்? “நான் ஆயுதங்களை கீழே போடுமாறுதான் கூறினேனே தவிர, சரணடையுமாறு கூறவில்லை“ என்று அந்தர்பல்டி அடிக்கப் போகின்றாரா?
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக இருந்தாலும் சரி, தமிழீழ மக்களாக இருந்தாலும்சரி, அவர்களின் பாதுகாப்புக் கவசங்களாகத் திகழ்ந்தவை புலிவீரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள். கனிமொழி வலியுறுத்தியதைப் போன்று ஆயுதங்களைக் கீழே போடும் எந்தவொரு போராளிக்கும் இரண்டு தெரிவுகளே இருக்கும் என்பதைச் சிறுபிள்ளையால்கூடப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று எதிரியின் துப்பாக்கிச் சன்னத்திற்கு இலக்காகிப் பலியாவது. மற்றையது எதிரியிடம் கைதியாகப் பிடிபடுவது. அதாவது பன்னாட்டுப் போர்ச் சட்டமுலாம் பூசிய வார்த்தைகளில் கூறுவதானால் எதிரிப் படைகளிடம் சரணாகதியடைவது.
2009 மே 17ஆம், 18ஆம் நாட்களில் கனிமொழி காட்டிய இந்த இரு தெரிவுகளுமே நிராயுதபாணிகளாக நின்ற ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு மிஞ்சியது. இவர்களில் நிராயுபாணிகளாக வெள்ளைக் கொடியேந்தி பேசச் சென்ற பா.நடேசன் போன்றவர்கள் சிங்களப் படைகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள். எழிலன் போன்றவர்கள் உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டுக் காணாமல் போனோர் ஆக்கப்பட்டார்கள்.
இன்று எழிலனைத் தெரியாது என்று கதையளக்கும் கனிமொழி, நாளை பா.நடேசன் அவர்களையும் தனக்குத் தெரியாது என்று கூற முற்பட்டாலும் நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனாலும் இரண்டாவது தடவையாக இப்பத்தி ஊடாக ஈழமுரசு பத்திரிகை வெளியிடும் கனிமொழியின் மின்மடல்கள், கருணாநிதியும், அவரது வழித்தோன்றலான கனிமொழியும் இழைத்த துரோகங்களை மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி: ஈழமுரசு


No comments:

Post a Comment