கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் ஆயுதக் குழுக்களினால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவில் பெண் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவினர் நாளை மறுதினம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களினால் தங்களது பிள்ளைகளும், கணவரும் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் வழங்கிய சாட்சியங்களையும், முறைப்பாடுகளையும் குறித்த குழுவினர் பெற்றுக்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆணைக்குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வட, கிழக்கு மாகாண தமிழ் மக்களினால் இதுவரை மூவாயிரம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் சிலர் மீதும் இவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் சிலர் மீதும் இவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு எதிர்வரும் சில தினங்களில் இவர்களை சாட்சியளிப்பதற்காக அழைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இவர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அது குறித்த அறிக்கை ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி மற்றும் ஆலோசனையுடன் இவர்கள் மீது விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்படும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment