August 28, 2016

செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் குடிநீரின்றி மக்கள் அவலம்!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

எமது கிராமம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து 1994 ஆம் ஆண்டு மீள்குடியேறிய கிராமம். இங்கு 90 குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வரும் நிலையில் எமது நீர்த்தேவைக்காக 08 குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள போதும் அதில் இரண்டு குழாய் கிணற்று நீரை மட்டுமே குடிக்க முடிகிறது. அவை ஒவ்வொன்றில் இருந்தும் கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 10 குடங்களுக்கு மேல் தண்ணீரை பெற முடிவதில்லை. 10 குடம் தண்ணீர் எடுத்து விட்டால் நீர் வற்றி விடுகிறது.

சில குழாய் கிணறுகளை அடித்தால் நீருக்கு பதிலாக காற்றுத் தான் வருகிறது. ஒரு குழாய் கிணற்றில் மின்சாரம் அடிக்கிறது. குழாய் கிணற்றில் இருந்து வருகின்ற நீரில் ஒரு வகை மணம் வீசுவதுடன், நீருடன் மினுங்கல் தன்மையும் சேர்ந்து வருகிறது. இதனால் இந்நீரை பரிசோதித்து குடிக்க வேண்டாம் என கூறிவிட்டார்கள். இது தவிர, 5 கிணறுகளும் இருக்கின்றது. அவற்றை குளிக்க மட்டுமே பயன்படுத்த முடிகிறது.

இங்குள்ள நீரில் கல்சியம் மற்றும் வேறு இரசாயனம் கலந்துள்ளமையால் பலருக்கும் சிறுநீரகப் பிரச்சனை சம்மந்தமான நோய்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுபிள்ளைகள் தொடக்கம் பெயரியவர்கள் வரை இந்த நீரை குடிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

நாளாந்தம் தேடித் திரிந்து கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பல மைல் தூரத்திற்குச் சென்று பணம் கொடுத்து பெற்று வந்து பயன்படுத்த வேண்டிய நிலையிலேயே தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அம் மக்கள் தமக்கு சுத்திகரிக்கப்பட் குடிநீரை வழங்க சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும் இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



No comments:

Post a Comment