August 28, 2016

நில மீட்புக்கான போராட்டத்தில் உயிரை விடவும் தயாராகும் மக்கள் : மயிலிட்டி பகுதி மீள கையளிக்கப்படுமா?

எங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம். எங்கள் சொந்த நிலங்கள் மட்டுமே வேண்டும். எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
நில மீட்புக்கான அந்தப் போராட்டத்தில் உயிரை விடவும் நாங்கள் தயாராக உள்ளோம் என மல்லாகம்-கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு வலிகாமம் வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாகம்-கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
எங்கள் நிலங்களை இனியும் விட மறுத்தால் பாராளுமன்றம் முன்பாகவும் வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்களை நடத்துவோம் எனவும் அந்த மக்கள் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

எங்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கிறார்கள். எங்களுடைய கடலில் படையினர் மீன்பிடிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அன்றாடம் உணவுக்காக பழைய இரும்பு பொறுக்கி கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசின் எந்த உதவிகளும் வேண்டாம்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மக்கள்,ஒரு காலத்தில் இலங்கையின் கடலுணவு மொத்த தேசிய உற்பத்தியில் பெரும் பங்கை மயிலிட்டி மக்கள் பெற்றுக் கொடுத்திருந்தனர்.

இன்று எமது கடற்றொழில் வளங்களை இராணுவம் ஆக்கிரமித்து நிற்க நாங்கள் சிறிய குடிசைக்குள் அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கிறார்கள். எங்களுடைய கடலில் படையினர் மீன் பிடிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அன்றாடம் வாழ்க்கை செலவுக்காக, அன்றாடம் உணவுக்காக தினசரி பழைய இரும்பு பொறுக்கி கொண்டிருக்கின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.6 மாதங்கள் தாருங்கள். உங்களுடைய சகல இடங்களையும் விடுகிறோம் என கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி எம்மிடம் நேரில் தெரிவித்தார். ஆனால் அந்தக் கெடு முடிந்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

இனியும் எங்களால் பொறுக்க முடியாது. எங்கள் நிலங்களை விடுவிக்காவிட்டால் பாராளுமன்றம் முன்பாக போராட்டட் நடத்துவோம். வேறு வழியில் தொடர் போராட்டங்களையும் முன்னெடுப்போம். எங்கள் நிலங்களை மீட்கும் போராட்டத்தில் நாங்கள் சாகவும் தயார் எனவும் உணர்சி வசப்பட்டு அந்த மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீரவிடம் தெரிவித்தனர்.
இதன்போது மயிலிட்டி பகுதி மக்களிடம் மீள கையளிக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

மயிலிட்டி பகுதி மக்களிடம் மீள கையளிக்கப்படுவது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடவேண்டும். அதேபோல் பொருத்தமான வழிமுறைகளையும் நாங்கள் தேடவேண்டும். மேலும் மீனவர் சமூகங்களின் பிரச்சினைகளை நாங்கள் நன்றாக அடையாளம் கண்டிருக்கின்றோம்.

எனவே இராணுவம் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி மீனவர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என் கூறியுள்ளார்.






No comments:

Post a Comment