July 8, 2016

சிங்களமயமானது நாயாறு - தமிழர்கள் உள்நுழையவும் தடை!

முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த கிராமத்திற்குள் நுழைவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் முல்லைத்தீவு மீனவ அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.


 
இலங்கை இராணுவமும் அதற்குத் துணைபோகின்ற அதிகாரிகளும் நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையை பூர்த்திசெய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

முகத்துவாரம் கிராமத்தை தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றிய பின்னரே நாயாறு கிராமத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. இப்பகுதியில் 299 சிங்கள குடும்பங்களைக் குடியேற்றும் பணி தற்போது பூர்த்தியடைந்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதியில் தற்போது நிரந்தரமாக வாழத்தொடங்கியுள்ளனர். "குறிப்பிட்ட பகுதி இராணுவ வலயமாகப் பேணப்படுகின்றது. தமிழர்களும் கிராம சேவகர்களும் இந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாக அனுமதி மறுக்கப்படும் நிலை காணப்படுகின்றது'' என்று கரைத்துறைப்பற்று தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரிய கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி சிங்கள குடியேற்றத்திற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதிலும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு சிங்கள மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை வழங்கிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மீனவர்களுக்கென அமைக்கப்பட்ட கூட்டுறவுச்சங்க கட்டடத்தை சிங்கள மீனவர்கள் முற்றாக ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1983ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்டது நாயாறு கிராமம். இதன் காரணமாக முழு கிராமமும் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது. 27 வருடங்களுக்குப் பின்னர் 2010இல் மீண்டும் குறிப்பிட்ட அளவு குடும்பங்கள் குடியேறின. எனினும், தற்போதைய அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் அந்தப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட பெரும்பான்மை மீனவர்களால் அந்தப் பகுதியின் தமிழ் கிராமத்தவர்களால் விரட்டப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment