August 3, 2016

தமிழரின் இன்றைய நிலை......?

உலகம் விழித்துக் கொண்டிருந்தபோது ஒரு நூறாயிரம் தமிழர்களின் உயிர் குடித்து இனவழிப்புச் செய்து ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால்.
தமிழ் இனத்தின் விடியல் இருளில் தள்ளப்பட்ட ஒரு அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர செயல் தான் முள்ளிவாய்க்கால்.


இன்றைய நிலையில் பிரதான சிங்கள அரசு இரண்டும் பதவியை தக்க வைப்பதிலும் பதவிக்கு வருவதிலுமே மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

ஈழ மக்களின் நிலை, அவர்களின் எதிர்காலம், ஈழ தமிழருக்கான நீதி உள்ளிட்ட அனைத்தும் தமிழருக்கு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழருக்கான சக்தி வலுவற்று போனதே இன்றைய தமிழரின் நிலைக்கு மிக பெரிய காரணம் என்பதை யாருமே மறுக்க முடியாது.

தமிழருக்காக நீதி வேண்டி போராட இன்று சக்தி வாய்ந்த ஆட்பலம் இன்றி போனதே, தமிழருக்கான நீதி இன்று இருட்டறையில் முடங்கி இருப்பத்துக்கான காரணமாகி போனது.

இன்றைய ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்காக போராட அன்றைய உறுதி, மனோநிலை, வைராக்கியம் என்பன இன்று எத்தனை பேரிடம் உண்டு என்பதே இன்றைய கேள்விக்குறி?

அப்பாவி ஈழ மக்களுடைய இன்றைய நிலைமை "மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு இடிப்பது" போன்றதாகிவிட்டது. ஈழத்து அப்பாவி மக்கள் இன்று நிர்கதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

இலங்கையில் நடந்தேறிய தமிழர்களுக்கெதிரான இனச் சுத்திகரிப்பின் உச்சமாகவே 2009ஆம் ஆண்டு மே மாதம் அறியப்பட்டது.

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக இலங்கை அரசு கூறி, ஒரு நாட்டின் இறையாண்மையை மீறி அந்நாட்டு மக்களையே கொன்று குவித்துவிட்டு பயங்கரவாதம் அழிந்து விட்டதாக மார்தட்டிக்கொண்டது.

1970ஆம் ஆண்டுகளில் தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளின் அகிம்சாவழிப் போராட்டம் தோல்வியை கண்டது.

இலங்கை அரசுடன் இனிப்பேசுவதில் எந்தப் பயனும் வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட காலமது.

அரசின் அடாவடி நடவடிக்கை முதலில் தமிழர்களின் மூலதனமான கல்வி மீது தரப்படுத்தல் என்ற முறையில் நடந்தேறியது.

இதைத் தொடர்ந்தே 1970ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்கள் ஆளும் அரசுக்கெதிராக ஆயுதவழிப் போராட்டமே தீர்வைக்கொண்டு வரும் என்ற தீர்க்க தரிசமான உண்மையை உணர்ந்து ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தார்கள்.

1980ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களின் அர்ப்பணிப்பு ஈழதேசிய விடுதலையை வென்று தருமென வடக்கு - கிழக்கு வாழ் தமிழர்களிடம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமாக பரந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

இலங்கை அரசின் இனவழிப்பு அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஒன்று, பத்து, நூறு, ஆயிரமென தமிழர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டார்கள்.

இனவழிப்பு நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாறத்தொடங்கியதும், அரசுக்கெதிராக பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதல்களில் வெற்றிபெற்று அரசுக்கு நிகரான ஒரு இராணுவ சக்தியை தமிழர் தரப்பு நிலை நிறுத்திக் கொண்டது.

1980ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில், இலங்கையில் இருவேறு தேசியங்கள் உள்ளது என்பதையும், அவர்கள் தங்கள் நீதிக்காகப்போராடுகின்றார்கள் என்ற உண்மையையும் உலகுக்கு வெளிப்படுத்தியது.

தமிழர் தரப்பு ஒரு பெரும் இராணுவ சக்தியாக மாறி இருந்ததையும், அங்கு தமிழீழ அரசு நிறுவப்பட்டு, சிங்கள அரசிடமிருந்து பிரிந்து தமிழ் பேசும் மக்கள் சந்தோசமாக வாழ்வதையும், பொறுக்காத இலங்கை அரசும், இந்திய அரசும் கூட்டாக தனது எதிர்ப்பை 1990ஆம் ஆண்டுக்கு பின்னரான காலங்களில் வெளிப்படுத்த ஆரம்பித்தன.

இலங்கை அரசின் இந்த பிற்போக்கான சதிவலைக்குள்ளும், இந்திய பிற்போக்கு வாத அரசின் சதிவலைக்குள்ளும் சில முதுகெலும்பில்லா தமிழ் தலைவர்கள் விழுந்ததன் விளைவே, 2009ஆம் ஆண்டு தமிழர்களின் மூச்சும், பேச்சும் நிறுத்தப்பட்டு, இனவழிப்பு நந்திக்கடலோடும், முள்ளிவாய்க்காளோடும் முடிக்கப்பட்டது.

இன்றைய புதிய அரசு எவ்வளவுதான் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டாலும், இந்த முகம் மாறும் இனவாத அரசுகளினால் இதுவரை ஏற்பட்ட இழப்புக்களுக்கு விலைதரவோ? அல்லது இந்த இழப்புக்களை ஈடு செய்யுமளவோ? எந்தத் தீர்வும் தரப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

முள்ளிவாய்க்காளோடு தமிழர்களின் போராட்டம் முடிவுபெற்று விட்டது எனக் கனவுகாணும் இலங்கை அரசு, ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். உலகில் தோற்கடிக்கப்படும் இனங்களே மாபெரும் சக்தியாக மாறி வெற்றி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment