June 29, 2016

துருக்கி விமான நிலைய தாக்குதலில் 36 பேர் பலி140 ற்கும் அதிகம் காயம்!

துருக்கி வர்த்தக நகர் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்தான்புல்லிலுள்ள Ataturk சர்வதேச விமான நிலையத்திலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று ஆயுத்தாரிகள் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டவாறு விமான நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த மூவரும் தாங்கள் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐ.எஸ். ஆயுததாரிகள் விமான நிலையம் மீதான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் (Binali Yildirim) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துருக்கியில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுடன் ஐ.எஸ். ஆயுததாரிகள் அல்லது குர்திஷ் போராளிகள் தொடர்புபட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது.
Ataturk சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலானது நீண்டகாலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமான நிலையத்தில் மூன்று X-ray ஸ்கானர்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் சில வாகனங்களை மாத்திரமே ஸ்கான் செய்ய முடியும் என குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் ஆயுதக்குழுக்களை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைவதற்கான திருப்பு முனையாக விமான நிலையம் மீதான தாக்குதல் அமைந்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி ரீசெய் தயிப் எர்கோடன் (Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலிற்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் துருக்கிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் விமான நிலையம் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிப்பதுடன் துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்டர் ஸ்ரைன்மையர் Frank-Walter Steinmeier தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment