மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள
காஞ்சிரங்குடா, பனையறுப்பான் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் கசிப்பு எனப்படும் (கள்ளச்சாராயம்) விற்பனை செய்யப்படுவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் வீட்டைச் சோதனை செய்து, அந்த வீட்டு உரிமையாளரை கைதுசெய்ய முற்பட்டனர். இந்த நிலையில், அங்கு பதற்ற நிலைமை தோன்றியதுடன், ஜீப் வண்டி ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது.
இதன்போது, அங்கு கூடிய பொதுமக்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட 07 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
மேலும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளதுடன், இளைஞர்கள் இருவரும் இந்த மோதலில் காயமடைந்துள்ளனர்.
மேற்படி இளைஞர்கள் இருவரையுமே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜே.விக்ரமசிங்க, வீரசிங்க ஆகியோரும்; வேல்முருகு சுகந்தினி, ஆறுமுகம் வள்ளியம்மை, முருகேசு டிலக்சன், முருகேசு ஜெயகரன் ஆகியோரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் காயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட 05 பொலிஸார் மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் தவநேசன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது குறித்த பகுதியில் அமைதி நிலவுவதுடன், சம்பவம் இடம் பெற்ற பகுதியில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (13) காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன், பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment