ஐந்தாண்டுகளின் பின்னர் தற்போதே நாம் மீண்டும் மக்கள் முன்னால் செல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று தமிழ் தேசத்தின் எதிர்காலம் ஒரு திருப்பு முனையில் உள்ளது. மீண்டும் இதே
நிலமை தான் என்றால் தமிழ் இனம் அழிந்தொழிந்து போகும் நிலமை தான் ஏற்படும். இதனை யாராலும் தடுக்க முடியாது. என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் ஊடகவியலாளர் மாநாடும் இன்று யாழ். ஊடக மையத்தில் இடம் பெற்றது.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஐந்தாண்டு ஆண்டுகளாக நாம் மக்களுக்கு கூறியதன் அடிப்படையில் இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் நியமனம் செய்துள்ளோம். மாற்றம் என்பது இன்று அத்தியவசியமாக காணப்படுகின்றது. கடந்த காலத்தில் நாம் குறிப்பிட்டதைப் போன்று இந்த தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் போராளிகள் மற்றும் பெண்களையும் உள்வாங்கிய நிலையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து விலகிய பின்னரும் கூட ஒரு கொள்கையைத்தான் கூறி வருகின்றோம். நாம் தேசம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அன்று முதல் இன்று வரைக்கும் கூறி வருகின்றோம்.
இதனை நாம் முன்வைக்கவில்லை. எமது முன்னோர்கள் மக்கள் முன் வைத்த கொள்கையைத் தான் பின்பற்றி வருகின்றோம். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்க்க மறுத்த நிலையில் தான் நாம் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்ல வேண்டிய நிலமையும் கூட ஏற்பட்டது.
தேசியவாதம் பேசுபவர்கள் என்று ஒரு கட்சியில் இருப்பவர்கள் கூறுகின்றார்கள். தேசம் என்பது வெற்றுக் கோசம் எனவும் இது நடைமுறைச் சாத்தியம் அற்றது எனவும் பிரிவினைவாதம் எனவும் குறிப்பிடுகின்றார்கள்.
நாம் இன்று கூறுவது என்னவென்றால் இறுதி தீர்வு என்பது தமிழ் தேசமாகத் தான் இருக்க முடியும். இது புலிகளின் கொள்கையென்று அன்று கூறினார்கள். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கையென்பது அதிகாரப் பகிர்வாகும்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றுவதற்காக திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற கூறுகின்றார்கள். ஆனால் இவர்கள் தேர்தலில் வெற்ற பெற்றால் மீண்டும் அதிகாரப் பகிர்வு 13 ஆவது அரசியல் யாப்பு மாகாண சபைகள் என்றே கூறுவார்கள்.
காலம் காலமாக மக்களை நன்கு திட்டமிட்ட முறையில் இவர்கள் ஏமாற்றி வருகின்றார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment