July 23, 2015

நீதிமன்றத் தாக்குதல், போதை வஸ்து, பாலியல் வல்லுறவு, ரவடித்தனம் போன்ற சமூக விரோதக் குற்ற சந்தேக நபர்களுக்கு பிணை அனுமதியில்லை!- நீதிபதி இளஞ்செழியன் கட்டளை!

நீதிமன்றத்தின் மீதான தாக்குதல், போதை வஸ்து குற்றங்கள், கசிப்பு காய்ச்சியமை, பாலியல் வல்லுறவு, கோஸ்டி மோதல், ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் போன்ற சமூக விரோதச் குற்றச் செயல்களில் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை அனுமதி இல்லை என நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் 19 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பருத்தித்துறை நீதிமன்ற கட்டளையின்படி, கடந்த மே மாதம் 13 ஆம் திகதியில் இருந்து விளக்கமறியலில் இருந்து வருகின்ற சந்தேக நபருக்குப் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்தபோதே நீதிபதி இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.
இந்தப் பிணை விண்ணப்பத்தை குறுகிய கால தவணையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி நிராகரித்து, சமூக விரோதக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சந்தேக நபர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் தேர்தல் காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் மீதான தாக்குதலானது, நீதி தேவை மீதான தாக்குதலாகும். போதை வஸ்து குற்றங்களானது, சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதலாகும். பாலியல் வல்லுறவு குற்றங்கள் பெண்கள் மீது நடத்தப்படுகின்ற மோசமான தாக்குதல்களாகும். வாள்வெட்டுக்கள், கோஸ்டி மோதல்கள், தெரு ரவுடித்தனம் போன்றவை அப்பாவி இளைஞர்கள் மீதான தாக்குதல்களாகும்.
கசிப்பு விற்பனை என்பது, மாணவ சமூகம் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து நடத்தப்படுகின்ற சமூக கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களாகும். இத்தகைய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, மல்லாகம், சாவகச்சேரி, பருத்தித்துறை, கிளிநொச்சி ஆகிய நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைவாக நூற்றுக்கணக்கானவர்கள் விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.
இந்தக் குற்றங்கள் சமூக விரோதச் செயற்பாடுகள் மட்டுமல்லாமல், சமூகத்தில் கலாசார சீரழிவை ஏற்படுத்துகின்ற பாரதூரமான குற்றங்களாகும். இக்குற்றங்களுக்கு மேல் நீதிமன்றத்தினால், விசேட – விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே பிணை வழங்கக்கூடிய நிலைமை உள்ளது.
எனவே, இந்தக் குற்றங்கள் தொடர்பிலான சந்தேக நபர்களின் பிணை மனுக்கள் தேர்தல் காலத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. பிணையும் வழங்கப்படமாட்டாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள நீதிபதி இளஞ்செழியன், பருத்தித்துறையில் கைப்பற்றப்பட்ட 19 கிலோ கஞ்சா தொடர்பிலான சந்தேக நபரின் பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment