April 15, 2014

இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மிருகங்களை விட மிக மோசமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கும் 9 ஈழத்தமிழ் உறவுகள், தம்மை விடுதலை செய்து குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கையினை முன் வைத்து வருகின்ற 21-04-2014 அன்று திங்கட்கிழமை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
◆ இந்தோனேசியாவிற்கு எவ்வாறு ஈழத்தமிழர்கள் சென்றார்கள்?
குறிப்பிட்ட 9 ஈழத்தமிழர்களும் 09-03-2013 அன்று 124 பேருடன் இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து உயிர் தப்பி சுதந்திரக் காற்றினை சுவாசிப்பதற்காக அகதிகளாக அவுஸ்ரேலியா நோக்கி பயணமாகிய போது நடுக்கடலில் இயந்திரம் பழுதடைந்து பத்து நாட்களுக்கு மேலாக உணவு தண்ணீர் கூட இன்றி மயக்கமடைந்து உயிராபத்தான நிலையில் தத்தளித்து இந்தோனேசியா கரையைப் போய்ச் சேர்ந்தார்கள்.
கரை சேர்ந்த 124 பேர்களில் 58 பேர் தப்பித்து சென்று விட மீதமுள்ள 66 பேரையும் பெங்குளு என்ற இடத்தில் 1 மாத காலமாக காவலில் வைத்திருந்த இந்தோனேசியா காவல்துறை, அவர்களை 21 பேர் 45 பேராக இரண்டு பிரிவாகப் பிரித்தனர்.
21 பேர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்ததனால், அவர்களை உடனடியாக விடுதலை செய்வதாகக் கூறி தனியாக வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று குடும்பங்களாக இருந்த 21 பேரை விடுதலை செய்து விட்டு மேற்குறிப்பிட்ட 9 பேரையும் எந்தவிதமான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் ஏதுமில்லாத தனிச்சிறையில் இன்று வரையும் அடைத்தே வைத்துள்ளனர், இந்தோனேசியா குடிவரவு அதிகாரிகள்.
பல மாதங்களின் பின் ஐ.நா (UNHCR) அதிகாரிகள் குறிப்பிட்ட ஒன்பது பேரையும் விசாரணைக்குட்படுத்தி 4 பேரை அகதிகளாக ஏற்றுக் கொண்டு 3 பேரை ஏற்றுக் கொள்ளாமல் மீள் விசாரணைக்காக ஆவணங்கள் கொடுக்கப்பட்டும் நான்கு மாதங்கள் ஆகியும் இன்று வரையும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
சாதாரண சிறையில் கூட குற்றம் செய்து அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் மாற்று உடை வசதிகள் என நிறைய வசதிகள் இருக்கும். ஆனால், மேற்குறிப்பிட்ட ஈழத்தமிழர்களை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையானது எவ்வித வசதிகளுமின்றி மிருகங்களை விட மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இந்தச் செயலானது ஐ.நா.வின் மனித உரிமை விதி முறைகளுக்கு முரணானது. இச் செயலை ஐ.நாவும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது!
அடைக்கப்பட்டிருக்கும் 9 பேரும் இலங்கை யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அதில் 4 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்தவர்கள். ஒருவர் தலையில் துப்பாக்கி ரவையை சுமந்தபடி தினமும் தீராத தலை வலியினால் தினமும் தூங்க முடியாமல் துடித்து வருகின்றார். இன்னுமொருவர் காலில் படுகாயமடைந்த நிலையில் ஒழுங்கான மருத்துவ சிகிச்சையுமின்றி தினமும் இரத்தம் வழிந்தோடியபடி நடக்கமுடியாமல் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றார். மேற்குறிப்பிட்ட அனைவருமே மிகவும் மோசமாக உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து உயிர்தப்பி அகதியாக ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு உயிராபத்தான நிலையில் காயங்களுடன் கரை சேர்ந்தவர்களை சிறையில் அடைத்து வைத்து மிருகங்களை விட மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதன் நியாயங்கள் என்ன? அவர்கள் ஈழத்தமிழர்களாகப் பிறந்ததுதான் குற்றமா?
◆ 21-04-2014 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்
எது நடந்தாலும் பரவாயில்லை என நாதியற்றுக் கிடக்கும் மேற்குறிப்பிட்ட அந்த 9 அப்பாவி ஈழத்தமிழர்களும் தம்மை விடுதலை செய்து பிறிதொரு குடியேற்ற நாட்டிற்கு அனுப்பி சுதந்திரக் காற்றினை சுவாசிக்க விடுமாறு என்ற கோரிக்கையினை முன் வைத்து வருகின்ற 21-04-2014 அன்று திங்கட்கிழமை முதல் காலவரையற்ற சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக திட்டவட்டமாக அறவித்துள்ளார்கள்
◆ இந்தோனேசியாச் சிறையில் அடைக்கப்பட்டு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ள 9 ஈழத்தமிழர்களின் பெயர் விபரங்களும், ஐ.நாவின் விசாரணைப் பதிவு எண்களும் பின்வருமாறு:
1, பார்த்திபன் நாதன் 21 – 352 – 13C00275
2, ரதீபன் நாதன் 23 ” ”
3, ரஞ்சித் அசோகராஜா 24 – 353 – 13C00211
4, சூரியன் இரட்ணசிங்கம் 29 – 352 – 13C00277
5, துளசிகர் சின்னத்துரை 26 – 352 – 13C00270
6, அந்தோணி பெரியசாமி 37 – 352 – 13C00265
7, பிரசன்னா ரவீந்திரன் 27 – 352 – 13C00267
8, கண்ணதாஸ் செல்லையா 48 – 352 – 13C00269
9, ரொக்சன் டெனியஸ் ஞானசீலன் 25 – 352 – 13C00266
- வல்வை அகலினியன்.
10270073_723468824371422_1637718726_n - Copy10255856_723468827704755_1400536705_n   10255651_723468807704757_775126600_n - Copy 10250840_723468811038090_501534735_n10268208_723468817704756_207012209_n (1) - Copy

No comments:

Post a Comment