September 14, 2014

எமது இளைஞர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: முல்லை மாவட்ட இளைஞர் கழகம்!!

தமிழ் மக்கள் அவலங்களுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்ற சில இளைஞர் குழுக்கள் தங்கள் எழுந்தமான சிந்தனையுள்ள படைப்புக்கள் மூலம் தமிழர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள
முல்லை மாவட்ட இளைஞர் கழகம், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது இளைஞர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர் தாயகம் இன்று பெரும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்  தாயகத்தின் நாலாபுறத்தையும் ஆக்கிரமித்திருந்து சிங்களச் சேனைகள் இன்று தாயகத்தின் இதயத்தையே ஆக்கிரமித்திருக்கின்றான். இந்த ஆக்கிரமிப்புக்களை விஸ்தரித்து தாயகத்தில் நிலையாகத் தங்கியிருப்பதற்கான செயற்பாடுகளிலும் எதிரி ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றான். இந்தச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக தாயத்தில் உள்ள தமிழ் மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைவிட புலம்பெயர் தேசத்திலுள்ள இளைஞர்களும் மக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தாய்த் தமிழகத்திலும் பல போராட்டங்களும் தியாகங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர், யுவதிகள் தாயக மக்களுக்காக தங்களை தீயில் கருக்கி ஆகுதியாகியுள்ளனர். தாயகத்தில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் தலைமையில் விசாரணை இடம்பெறவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறான புறச்சூழல்களின் பின்னணியில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்ற சில இளைஞர் குழுக்கள் தாயகத்தைச் சிதைக்கும், தாயகத்தை இழிவுபடுத்தும் படைப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இது வேதனையானது. கண்டிக்கப்படவேண்டியது. பல்லாயிரக்கணக்கான எமது இளைஞர்களும் யுவதிகளும் கையில் கனரக ஆயுதம் தாங்கி களத்தில் போராடி வீரகாவியமான தேசத்தில் இன்று சில இளைஞர் குழுக்கள் கையில் மதுப்புட்டியுடன் அலைந்து ஆட்டம் போடுகின்றனர். இவர்களின் இந்தச் செயற்பாடுகள் விடுதலை நோக்கிய ஏனைய இளைஞர்களின் பயணத்திற்கு இடையூறானவை.
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அண்மைக்காலமாக இசை அல்பங்கள் தயாரித்து வெளியிடும் செயற்பாடுகள் தாராளமாக இடம்பெறுகின்றன. நவீன இலத்திரனியல் சாதனங்களின் வளர்ச்சி காரணமாக கையடக்கத் தொலைபேசியிலேயே குறும்படம் எடுக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த வளர்ச்சிகளை ஆரோக்கியமாகப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து கையில் மதுப்புட்டியுடன் தவறான கருத்துக்களை உள்ளடக்கி, ஆட்டம்போட்டுக்கொண்டு இசை அல்பங்கள் தயாரித்து, அவற்றை ஏனையோரின் பார்வைக்கு அனுப்புவது அல்லது அதனை பகிரங்கப்படுத்துவது என்பது விடுதலை நோக்கிய எமது பயணத்தை மழுங்கடிப்பதற்கு செய்யப்படுகின்ற செயலாகவே நோக்கப்படும்.
ஒரு இனத்திற்கு கலைகள் அவசியமானவை. இலக்கியங்கள் அவசியமானவை. ஆனால் அவை காலத்தின் கண்ணாடியாக அமைய வேண்டும். போர் நடைபெற்றுக்கொண்டிருந்த கடந்த காலங்களில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் எழுந்த படைப்புக்கள் அனைத்தும் எமது அந்தக் காலத்தின் கண்ணாடியாக இன்றும் எங்கள் கண்முன்னே நிற்கின்றன. எமது மக்களுடைய அவலங்களும் எமது இளைஞர்களின் தியாகங்கள், வீரதீர செயல்கள் என்பனவே அன்றைய காலத்தில் படைப்புக்களாக வெளிவந்தன. அதேபோன்று இன்றைய காலத்தில் எமது இனம் மிகவும் துன்பப்பட்ட இனமாக, அவலங்களால் வலிகளைச் சுமந்துகொண்டிருக்கின்ற இனமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றது. விடுதலைக்காக பல்வேறு முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே, தற்காலத்தில் வெளிவருகின்ற இசை அல்பங்கள் போன்ற படைப்புக்கள் எமது மக்களின் வலிகளை வெளிப்படுத்துவனவாக அமைவதே புத்திசாலித்தனமானது. வரவேற்கத்தக்கது. அதை விடுத்து எமது போராட்டத்தையும் எமது இளைஞர் யுவதிகளின் தியாகங்களையும் கொச்சைப்படுத்தி வெளிவருகின்ற படைப்புக்கள் எமது மக்களை மேலும் அவலத்திற்கும் தள்ளுபவையாகவே அமையும்.
இந்தச் செயற்பாடுகள் தொடர்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள கலைஞர்கள் சிந்திக்க வேண்டும் என்று முல்லை மாவட்ட இளைஞர் கழகம் வலியுறுத்துகின்றது. காலத்தின் கடப்பாடு எதுவோ அதனுடன் இளைஞர்கள் ஒன்றித்து வாழ வேண்டும். அதற்கு எதிர்மாறாக உலாவருகின்ற எந்தக் கலைஞர்களும் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பதையும் எமது கழகம் வெளிப்படையாக கூறிவைக்க விரும்புகின்றது.

No comments:

Post a Comment