September 14, 2014

தியாகி திலீபன் எழுச்சி நாளில் மக்கள் புரட்சியை ஏற்படுத்துங்கள்!

தாயகத்தில் இருந்து ஒரு வேண்டுகோள்
தமிழீழத் தாய் மண் மீட்புக்கான போராட்டத்தின் களம் இன்று தாயகத்தில் இருந்து புலம்பெயர் தேசத்திற்கு இடம்மாறியிருக்கின்றது. போராட்ட வடிவங்கள் மாறலாம் போராட்ட இலட்சியம் மாறாது
என்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கூற்றுக்கிணங்க, இன்று போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டிருக்கின்றது. தாயகத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரட்டம் முடிவுக்கு வந்த நிலையில் சர்வதேச ரீதியாகப் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற தேசிய அமைப்புக்கள் மூலமாகவும் தேசியச் செயற்பாட்டாளர்கள் மூலமாகவும் போராட்டங்கள் நெறிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமான போராட்டமாகவே எதிர்வரும் 15 ஆம் திகதி ஐ.நாவின் மனித உரிமைச் செயலகம் வரை வெகுஜனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புலம்பெயர் தேசங்களில் தமிழீழ மக்கள் ஒவ்வொரு போராட்டங்களையும் நடத்துகின்றபோது இங்கே தாயகத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் மனத்தில் என்றுமில்லாத ஒரு எதிர்பார்ப்பு மேலோங்கும். அது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பாகவே இருக்கும். அந்த வகையில்தான் எதிர்வரும் 15 ஆம் திகதி புலம்பெயர் தேசத்தில் நடைபெறவுள்ள வெகுஜன எழுச்சிப் போராட்டம் தொடர்பாகவும் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புக்களுக்கு காரணம் இல்லாமில்லை. அந்தக் காரணத்தை அனைவரும் அறிய வேண்டும்.
தாயகத்தில் இத்தனை வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றனர். இதற்கு மேலாக இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் தங்கள் உயிர்களை காணிக்கையாக்கியிருக்கின்றனர். இதைவிட கோடானுகோடி பெறுமதியான சொத்துக்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. தமிழரின் கலை, கலாசாரம், பண்பாடுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. தமிழரின் இனத்துவ அடையாளம் அழிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இத்தனை இழப்புக்களுக்கும் நிகரான தீர்வு ஒன்று வேண்டும் என்பதில் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் அசைக்கமுடியாத உறுதியுடன் இருக்கின்றனர். இந்த உறுதிப்பாடு காரணமாகவே புலம்பெயர் தேசத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு போராட்டத்தின்போதும் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
தமிழர் தாயகத்தில் தற்போது எந்தவொரு போராட்டங்களையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாலேயே முற்றுமுழுதாக புலம்பெயர் தமிழ் மக்களை நம்பவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதுவரை தாயகத்தில் இடம்பெற்ற எங்கள் தேச விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஒரு காணொளியையோ, போராட்டம் தொடர்பான எழுச்சிப் பாடல்களையோ கேட்க முடியாத கலைத்துவ வறுமையுடனேயே மக்கள் இருக்கின்றனர். எங்காவது ஒரு தேசிய உணர்வாளர் தாயக எழுச்சிப் பாடலை இணையத்தளம் ஊடாக ஒலிக்க விட்டால் அதைக் கேட்பதற்கு அந்த இடத்தில் இருக்கின்ற மக்கள் காட்டுகின்ற ஆர்வத்தை வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. விடுதலை உணர்வை இழக்க விரும்பாமல் வாழ்ந்து வருகின்ற தாயக மக்கள் குக்கிராமங்களுக்குள்ளும் இறக்கிவிடப்பட்டிருக்கின்ற புலனாய்வாளர்களுக்கு பயந்து எதையும் வெளிக்காட்ட முடியாதவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் இனிவரும் போராட்டங்கள் அனைத்தும் புலம்பெயர் தமிழ் மக்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் புலம்பெயர் தமிழ் மக்களின் 15 ஆம் திகதிப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தப் போராட்டத்தில் புலம்பெயர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒட்டுமொத்தமாக, உணர்வுபூர்வமாக கலந்துகொள்ளும்போதுதான் அது உண்மையான போராட்டமாக மாறும்.
இல்லையேல் அந்தப் போராட்டம் எங்கள் நிலம் மீட்புக்கு உதவப்போவதில்லை. இந்தப் போராட்டம் வெற்றிபெறாவிட்டால் ஏற்கனவே கூறப்பட்டதைப் போன்று புலிகளின் வால்பிடிகள் சிலரே வேலையற்றுக் கத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு விடுதலை தேவையில்லையென்ற கருத்துருவாக்கம் ஒன்று வெளிப்படுத்தப்படும். எனவே இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தீவிர அக்கறையாக இருக்கவேண்டும். எங்கள் போராட்டத்தை எவனும் கொச்சைப்படுத்த அனுமதிக்க முடியாது.
கடந்த வாரம் புலம்பெயர் தேசமொன்றில் இருந்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட நண்பர் ஒருவர் தாங்கள் நடத்தவுள்ள போராட்டம் தொடர்பாக தெரிவித்தார். அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாகவும் கூறினார். இந்தப் போக்குவரத்து ஏற்பாட்டிலுள்ள நெருக்கடிகள் தொடர்பாக அவர் கூறிய கருத்து வேதனையானது. ஒரு போராட்டத்தை நடத்துவதில் ஏற்பாட்டாளர்களுக்கு உள்ள சிரமம் என்பது வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அந்தப் போராட்டம் முடிவடைந்து மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்பும் வரை ஏற்பாட்டாளர்கள் ஓய்வதில்லை. ஆயுதப் போராட்டத்தை விட மக்கள் போராட்டம் பலமானது. ஆனால் அதுவே சிரமமானது. ஆயுதத்துடன் களத்தில் போராடும் போராளியின் இலக்கு எதிரி மட்டுமே. ஆனால், வெகுஜனப் போராளிகளின் இலக்கு பல்வேறு பரிணாமங்களில் இருக்கும். எனவேதான் இந்தப் போராட்டங்களை ஒழுங்குபடுத்துபவர்கள் பாரிய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற பல புலம்பெயர் நாடுகளில் இருந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் செயலகத்தை நோக்கி மக்கள் அணிதிரளவுள்ளனர். இதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் அந்தந்த நாடுகளில் உள்ள தேசியச் செயற்பாட்டாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நினைத்தவுடன் வாகனத்தில் ஏறிச் செல்வதற்கு நீங்கள் இருக்கின்ற இடம் யாழ்ப்பாணமோ, வன்னியோ அல்ல. நீங்கள் வாழ்கின்ற நாட்டிலுள்ள சிரமங்கள் உங்களுக்கே புரியும். எனவே, ஜெனிவா நோக்கிய போராட்டத்திற்கு செல்லவுள்ள மக்கள் அனைவரும் இறுதி நாள் வரை காத்திருக்காமல் மிக விரைவாகவே சென்று ஏற்பாட்டாளர்களிடம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே தொடரூந்துகள் ஏற்பாடு செய்யவேண்டிய நிலை ஏற்பாட்டாளர்களுக்கு இருக்கின்றது. போராட்டத்திற்குச் செல்கின்ற தனியரு நபர்கூட தொடரூந்தில் இடம் இல்லை என்பதற்காகத் திரும்பிச் செல்லக்கூடாது. இது தேசியப் போராட்டம். இது உங்கள் தேசியக் கடமை. தாயக மக்களுக்காக, நீங்கள் வாழ்ந்த, வாழப்போகின்ற தாயகத்தை மீட்பதற்கான போராட்டம். எதிர்காலச் சந்ததி எங்களைப் போன்று அல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கான போராட்டம்.
எங்கள் தாயகத்தை எதிரி சூறையாடிக்கொண்டிருக்கின்றான். தாயகம் முழுமையிலும் நன்கு திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழர்களின் பெரும்பாலான நிலங்களில் சிங்கள படை முகாம்களும் சிங்களக் குடியேற்றங்களுமே இருக்கும். அரை நூற்றாண்டு கடந்துவிட்டால் தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே தெரியாமல் பறங்கி இனத்தவர் அனைவரும் சிங்களவர்களுடன் இரண்டறக் கலந்ததைப் போன்று தமிழ் மக்கள் என்ற இனம் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்.
புலம்பெயர் தேசத்திலிருந்து வரும்போது நீங்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து பாருங்கள். யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களே ஆகின்றன. ஆனால் யுத்தம் நடந்தது என்பதற்கான அடையாளமே இல்லாமல் அனைத்து இடங்களையும் படையினர் சுத்திகரித்து வருகின்றனர். ஐந்து வருடங்களிலேயே இப்படி என்றால் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தமிழினத்தையே துடைத்தழித்து தமிழர்கள் அனைவருக்கும் சில்வா என்றும் பண்டா என்றும் நாமங்கள் சூட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். இப்போது நடப்பது போன்று தாயகத்தில் சிங்கள ஆதிக்கம் தொடருமாயின் தாயகத்திலுள்ள உங்கள் அக்காவின், தங்கையின், அண்ணாவின், சித்தப்பாவின், மாமியின் பிள்ளைகள் சிங்களவர்களைத்தான் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஏனெனில் அவர்களின் அயல்வீடுகளில் சிங்களவர்கள்தான் குடியிருப்பார்கள்.
இந்த நிலமைகள் இல்லாமல் தடுப்பதற்காகவே நீங்கள் புலம்பெயர் தேசத்தில் போராட வேண்டும். எதிர்வரும் 15 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் செயலகம் முன்பாக தமிழரின் விடுதலைக் கோசம் முழங்க வேண்டும். இந்தக் கோசத்தால் ஐக்கிய நாடுகள் சபை அதிர வேண்டும். இன்றே செல்லுங்கள். விடுதலைக் கோசம் முழங்குவதற்கான உங்கள் பதிவை உறுதிப்படுத்துங்கள். இதுவரை விடுதலைப் போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் செய்யாதவர்கள் இராமர் பாலம் கட்டுவதற்கு ஒரு கல் எடுத்துப் போட்ட அணிலைப் போல இந்தப் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளுங்கள். எமது விடுதலைக்கான பயணத்தில் நீங்களும் ஒரு மைல் கல்லாக பதியப்படுவீர்கள்.
‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையைப் பெற்றெடுத்தாக வரலாறு இல்லை. அந்த விடுதலை இயக்கத்திற்கு பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் போதுதான் அது மக்கள் போராட்டமாக, தேசியப் போராட்டமாக முழுமை பெறுகிறது. அப்போதுதான் விடுதலையும் சாத்தியமாகிறது’
என்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கூற்றுக்கு இணங்க எமது மக்கள் போராட்டங்கள் மூலம் எழுச்சியடைகின்ற போதுதான் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் 15 ஆம் திகதி ஜெனிவாவில் மக்கள் எழுச்சியன்று ஏற்பட வேண்டும். தியாகி திலீபன் கூறியதைப் போன்று மக்கள் புரட்சியன்று வெடிக்க வேண்டும். அவரின் நினைவுகள் சுமந்த நாளில் இடம்பெறுகின்ற ஜெனிவா நோக்கிய பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு மக்கள் புரட்சியை ஏற்படுத்துங்கள். நிச்சயமாக விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும்.
தாயகத்தில் இருந்து காந்தரூபன்
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment