April 25, 2014

7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு மனு அரசியல் சாசன பெஞ்சு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு
தாக்கல் செய்த மனுவை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை 3 மாதத்துக்குள் விசாரணை செய்து முடிவுக்கவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத் தொடர்ந்து இந்த மூவர் மற்றும் ஏற்கெனவே ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேர் என மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்தும் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசுக்கு பதில் தெரிவிக்காமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று முடிவடைந்துவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் இன்றுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் மனுவை 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் 7 கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி அதை ஆராயவும் உத்தரவிட்டுள்ளது. 

இது போன்ற வழக்கை உச்சநீதிமன்றம் இப்போதுதான் எதிர்கொள்கிறது என்றும் இந்த வழக்கின் விசாரணையை 3 மாதத்துக்குள் அரசியல் சாசன பெஞ்ச் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment