July 5, 2014

சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - கரும்புலிகள் நாள் 2014


அன்புக்குரிய தமிழீழ மக்களே!

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.

எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.

தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ - அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.

தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்களை எமது வீர மறவர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல் , தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள். எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ , காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட இரும்பு மனிதர்கள் அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச்சென்றுள்ளார்கள்.

அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள்.அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல; எம்முன் எல்லாமுமாய் நிறைந்தவர்கள்.

நேற்று வரை மட்டுமல்ல; இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம்.

இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை தமிழீழ மக்களாகிய நாம் தலைசாய்த்து வணங்கி அவர்களின் இலட்சியமான தமிழீழ விடுதலைக்கும், தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, பணிசெய்வோம் என இன் நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

"பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்" தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள்

No comments:

Post a Comment