July 19, 2016

சிங்கப்பூரில் ரணிலுக்கு வரவேற்பு - 5 ஒப்பந்தங்களும் கைச்சாத்து!

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி மாளிகையான இஸ்தானாவில் நேற்று செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமரை சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லூன் வரவேற்றதோடு சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்.

 
இதன் போது இரு நாடுகளுக்குமிடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மேல் மாகாண பாரிய அபிவிருத்திக்கான ஒப்பந்தம், கலாசார ஒத்துழைப்பு ஒப்பந்தம், அரசாங்க ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் பரிமாற்றுவதற்குமான ஒப்பந்தம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விக்கான ஒப்பந்தம் என்பனவே கைச்சாத்திடப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி) ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தனர். இருவரையும் சிங்கப்பூர் பிரதமர் லீ சிங் லூன் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் விருந்தினர்களுக்கான நினைவு ஏட்டில் கையெழுத்திட்டார். அடுத்து இருநாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இருநாட்டு தலைவர்களுக்குமிடையிலான இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான சந்திப்பு இடம் பெற்றது. முதலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றதோடு அடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதி டோனிடேனுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்களையடுத்து இரு நாட்டு தலைவர்களினதும் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.


No comments:

Post a Comment