July 7, 2016

இராணுவத்தினரை விசேட நீதிமன்றின் எதிரில் முன்னிலைப்படுத்த முடியாது ; டெஸ்மன் டி சில்வா!

வன்னிப் போரில் ஈடுபட்ட இராணுவத்தினரை விசேட நீதிமன்றின் எதிரில் முன்னிலைப்படுத்த முடியாது பிரிட்டனின் சிரேஸ்ட சட்டத்தரணி டெஸ்மன்ட் டி சில்வா கூறியதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து டெஸ்மன்ட் டி சில்வாவிடம் வினவிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. இதனால் நீதிமன்ற விசாரணைகளை நடத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நீதிமன்றின் வழக்குப் பணிப்பாளராக டெஸ்மன்ட் டி சில்வா கடமையாற்றியுள்ளார்.

30 ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பிரயோகிக்கப்பட்ட பீதியையையே படையினர் இல்லாதொழித்தனர் என்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்மன்ட் டி சில்வாவின் இந்தக் கருத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் சிவிலியன்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சட்டத்தரணி டெஸ்மன்ட் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவிலும் டெஸ்மன்ட் டி சில்வா இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment