July 14, 2016

கொலைக் குற்றவாளிக்கு மேன்முறையீட்டில் பிணை வழங்க மறுப்பு - நீதிபதி இளஞ்செழியன்!

கொலைக்குற்றம் ஒன்றுக்காக பத்து வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.


அந்தப் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி இரத்தினம் மணிவண்ணன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கிருஸ்ணபிள்ளை பிரேமன் என்பவருக்கு 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளி மேன் முறையீடு செய்துள்ளார்.

இந்த மேன்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியாகிய கிருஸ்ணபிள்ளை பிரேமனை பிணையில் செல்ல அனுதிக்குமாறு பிணை மனுவொன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன், கொலைக்குற்ற வழக்கில் பத்து வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு மேன் முறையீட்டு

வழக்கு நிலுவையில் உள்ளபோது பிணை வழங்க முடியாது என மறுத்துள்ளார். அத்துடன், அந்தப் பிணை மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கியுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்த பிணை மனுவில் சம்பந்தப்பட்ட கிருஸ்ணபிள்ளை பிரேமன், இரத்தினம் மணிவண்ணன் என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கடூழிய சிறைத் தண்டனை விதித்து தண்டிக்கப்பட்ட குற்றவாளியாவார்.

பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியாகிய அவர், தன்னை பிணையில் விடுமாறு கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை.

விதிவிலக்கான சந்தர்ப்பங்களை முன்வைத்தால் மாத்திரமே பிணை வழங்க முடியும். ஆனார், இந்த பிணை மனுவில் எதுவிதமான விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் முன்வைக்கப்படவில்லை.

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முற் தீர்ப்புக்களில் ஒன்றாகிய தாமோதரம்பிள்ளை என்பவருடைய வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், குற்றவாளியாகக் காணப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், மேன் முறையீட்டின்போது அவருக்கு பிணை வழங்குவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்ணபிள்ளை பிரேமனுடைய வழக்கில் கொலைக்குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஒரு குற்றவாளி என மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியுள்ளது.

எனவே, சாதாரண வழக்கைப் போன்று, குற்றம் நிரூபிக்கப்படும் வரை, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் நிரபராதி என கூறி, இந்த வழக்கில் வழக்காட முடியாது. எனவே, கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கிருஸ்ணபிள்ளை பிரேமன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று ஒரு தீர்ப்பளிக்கப்படும் வரையில் அவருக்குப் பிணை வழங்க முடியாது.

அத்துடன் அவருடைய பிணை மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கின்றது” என நீதிபதி இளஞ்செழியன் தனது தீரப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment