கொலைக்குற்ற சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்யச் சென்றபோது குறித்த சந்தேகநபர் பொலிஸாரை வாளால் வெட்ட முயன்றமையால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (30) மாலை அல்வாய் பகுதியில் இடம்பெற்றது.
காலில் படுகாயமடைந்த சந்தேகநபரான எம்.சதீஸ்குமார் (வயது 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அல்வாய் வடக்கு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தகராறு ஒன்றின் போது சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார், இருவரைக் ஏற்கெனவே கைது செய்தனர். எனினும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.
சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (30) அல்வாய் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை தலைமைப்பீட பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் நுவான்.பீ.டந்தநாராயண தலைமையிலான குழுவினர் குறித்த சந்தேகநபரைக் கைது செய்யச் சென்றனர்.
பொலிஸாரைக் கண்டதும் சந்தேகநபர் பொலிஸாரை வாளால் வெட்டுவதற்கு எத்தணித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து, பொலிஸார் சந்தேகநபரை காலில் சுட்டுக் கைது செய்தனர்.
No comments:
Post a Comment