June 15, 2014

சிறிலங்காவில் வசித்துவரும் 1,475 பாகிஸ்தானியர்களை பிடிக்க நடவடிக்கை


பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியமையை அடுத்து
சிறிலங்காவில்  அகதிகளாகப் பதிந்துவிட்டு இங்கு தரித்திருக்கும் சுமார் ஆயிரத்து 475 பாகிஸ்தானியர்களைச் சுற்றி வளைத்து மடக்கும் நடவடிக்கை ஒன்றை இலங்கை குற்றவியல் புலனாய்வுப் பொலிஸாரின் (சி.ஐ.டியினரின்) உதவியுடன் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வியாழனன்று சத்தம் சந்தடியின்றி ஆரம்பித்திருக்கின்றனர். 

இந்த நடவடிக்கையின் கீழ் குறிப்பிடப்படாத எண்ணிக்கை பாகிஸ்தானியர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

சிறிலங்காவில்  உள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தில் பதிந்துவிட்டு இங்கு தங்கியிருக்கும் 1,475 பாகிஸ்தானியர்களை வளைத்துக் காவலுக்குள் கொண்டு வருவதே திட்டம் என்றும் கூறப்பட்டது. 

சிறிலங்காவில் செயற்படும் சில பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக வெளியான புலனாய்வுத் தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை.

எனினும் பாகிஸ்தானுடனான சிறிலங்காவின் உறவைப் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளும் விதத்தில் இந்த நடவடிக்கை சத்தம் சந்தடியின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அறியவருகின்றது. 

நீர்கொழும்பிலும், கிழக்கின் சில முஸ்லிம் பிரதேசங்களிலும் தங்கியிருந்து இந்த பாகிஸ்தானியர் செயற்படுகின்றனர் என்றும் கருதப்பட்டது. நீர்கொழும்பில் தங்கியிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. 

இங்கு அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதுகாப்பு உத்தரவாத அந்தஸ்தை அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் வழங்கி வருகின்றமையை சிறிலங்கா  அரசு கடுமையாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிறிலங்காவை  தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இந்தியாவினால் சிறிலங்காவிற்கு  மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

No comments:

Post a Comment