July 19, 2016

அரசு திணித்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறை தமிழர்களின் விடுதலைத் தெய்வம் என பூசிப்பதா?

மாற்றமில்லாத நிலையில் இருந்து நிலைமாறு கால நீதியை பாதிக்கப்பட்ட மக்கள் அணுகுகின்ற வரலாற்றில் ஆட்சி மாற்றத்தை ஒட்டு மொத்த பேரினவாத கருத்தியல் மாற்றம் என தம்பட்டம் அடிப்பதும், ஸ்ரீலங்கா அரசு திணித்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறை தமிழர்களின் விடுதலைத் தெய்வம் என பூசிப்பதும் தமிழர்களை ஏமாற்றும் ஒரு செயலே என சிவில் சமூக இணைப் பேச்சாளராகிய எழில்ராஜன் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பகிர்வு நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த நிகழ்வு மன்னார் கீரியில் உள்ள ஞானோதய மண்டபத்தில் நடைபெற்றது.

எழில்ராஜன் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு:

2009 மே 18ற்கு பின்னரான களம் தமிழ் அரசியல் தலைமைகள் பிரித்தாளும் பொறிக்குள் சிக்கி தமிழர்களின் கூட்டு உதிரியான இருப்புரிமைகளின் மேல் சோரம் போன காலமென்றால் மிகையாகாது.

வன்வலு சோர்வுற்ற நிலையில் தோல்வியின் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்கள் எதிர்காலத்தில் தமிர் அரசியல் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்வு கூறாதது சாபக்கேடு என்று கூறலாம்.

பல வழிச்சிந்தனைகள் திறக்கப்பட்ட காலத்திற்குள் தமிழ் சமூகம் வழிநடக்க தொடங்கியுள்ளது என்று கூறிய மேட்டுக்குடிச் சமூகம் தாராளவாத நல்லிணக்க முயற்சிகள் முதலாளித்துவ வர்க்க நலன்கள் சார்ந்தது.

குறிப்பாக நல்லிணக்க முயற்சிகள் இரு வழியூடு அணுகப்படலாம் என்ற தாராளவாத நல்லிணக்க முன்னெடுப்புக்கள் முன்மொழிவை ஏகமனதாக விமர்சனம் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது.

சந்தைப்படுத்தலும், தாராள சனநாயக மயப்படுத்தலும்தான் நல்லிணக்க பொறிமுறையின் இருவழி அணுகுமுறையானால் தாராள சனநாயக மயப்படுத்தலில் சனநாயக நிறுவனங்கள் அல்லது கட்டமைப்புக்கள் மீள சீரமைப்புக்கு உட்படுத்தப்படுவதால் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தலாம் எனக் கூறுவது நிலைமாறு கால நீதிப்பொறிமுறையின் கீழ்வரும் நிறுவன மாற்றத்தை ஒத்ததாகுமானால் இது இன்னுமொரு மீற் நிகழாமையை உறுதிப்படுத்துமா, என்பது கேள்விக்குரியதே.
தாராளவாத நல்லிணக்கப் பொறிமுறையின் அணுகுமுறைகள் இதுவரைக்கும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தியிருக்கின்றனவா?

வரலாறு இன்னும் இனப்படுகொலை பட்டறிவு கற்றலுக்குள்ளிருந்து தெளிந்திருக்கின்றதா?

இல்லாவிடின் நிறுவன மீள்கட்டமைப்புகளுக்கு மட்டுமே மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் என்பது மீண்டும் ஸ்திரமற்ற தன்மையை எதிர்நோக்கிய பயணமாக அமையும்.

பாதிக்கப்பட்டவர்களின் உரிமை மென்வலு சார்ந்தது. அந்த மென்வலுதான் இன்றைய அரசியல் நீரோட்டத்தின் வன்வலுவாக உள்ளது என்பதை இன்னும் உணராத நிலை தமிழ் தலைமைகளிடம் ஒரு ஐதீகமாக புரையோடிப் போயிருப்பதும், அதை ஸ்ரீலங்கா அரசும், தெற்கு தன்னார்வ நிறுவனங்களும், மூலதனப்படுத்தியிருப்பதும் (Capitalize) இன்னும் விளங்காமல் இருக்க முடியாது என எண்ணத் தோன்றுகின்றது.

மாற்றமில்லாத நிலையில் இருந்து நிலைமாறு கால நீதியை பாதிக்கப்பட்ட மக்கள் அணுகுகின்ற வரலாற்றில் ஆட்சி மாற்றத்தை ஒட்டு மொத்த பேரினவாத கருத்தியல் மாற்றம் என தம்பட்டம் அடிப்பதும், ஸ்ரீலங்கா அரசு திணித்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறை தமிழர்களின் விடுதலைத் தெய்வம் என பூசிப்பதும் தமிழர்களை ஏமாற்றும் செயலன்றி வேறென்னவென்று கணிப்பிட முடியும்?

இதுவரைக்கும் ஆயதப்போர் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் நிலைமாறு கால நீதி சார்ந்து தமிழர்களின் கூட்டு இருப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையை முன்வைத்ததா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டியுள்ளது.


மாற்றம் அற்ற அல்லது மாற்றமே மாற்றத்திற்கு உள்ளாகும் வரலாற்றுச் சூழலில் ஸ்ரீலங்காவின் நிலைமாறுகால நீதி


நிலைமாறுகால நீதிப் பொறிமுறை முன்னெடுப்பதற்குரிய அரசியல் மாற்றம் ஸ்ரீலங்காவில் நிகழ்ந்துவிட்டதா, என்றால் அதற்கான விடை அரசியல் சார்பானது.

தற்போதுள்ள ஆட்சி மாற்றத்தை அரசியல் மாற்றமாக கருதுபவர்களுக்கு அது அரசியல் மாற்றமாகவும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு அது மாற்றமற்ற மாற்றமாகவும் புலப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழலில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் முன்னெடுக்கப்படலாமா? இல்லையா என்பது விவாதத்திற்குரியது.

இருப்பினும் (Thomas Obel Hansen) தோமஸ் ஒபல் ஹன்சன்  போன்ற ஒரு சிலர் மாற்றம் அற்ற மாற்றச் சூழலிலும் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகள் முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிடுகின்றனர்.

அப்படியாயின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் சாதாரணமயப்படுத்தப்படுகின்றனவா?



‘Normalisation’ அவ்வாறெனில் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த போர் பின்னணியில் இடம்பெற்ற குற்றங்களின் வீரியம் குறைக்கப்படுகின்றதா?

வடக்கு-கிழக்கு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுப் புலம் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை முன்னெடுக்க ஏதுவானதாக இல்லையென்பதை ஆர்வலர்கள் பலர் முன்னெடுத்தபோது, அரசியல் தலைமைகள் மௌனம் காத்தது வியப்புக்குரியது.

மாற்றமில்லாத மாற்ற வரலாற்று புலத்தில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை ஏற்றுக்கொண்டது அரசியல் தவறாக கருதும்போது அப்பொறிமுறை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுவதற்கு பச்சைக்கொடி காட்டியது இரட்டிப்பான தவறு.

ஏனெனில், அச்செயன்முறை இராணுவ மயமாக்கலின் அரசியலுக்கு ஏற்புடைத் தன்மையை வழங்குகின்றது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் இராணுவ மய நீக்கம் என்பது வடக்கு கிழக்கில் நடைபெறப்போவதில்லை.

இராணுவ மய நீக்கம் நடைபெறாவிட்டால் உளவாளிகள் தொல்லையும், வெள்ளைவான் கடத்தல்களும், பாலியல் பலாத்காரங்களும், விசாணைகளும், சித்திரவதைகளும் குறைவதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லாதவொரு எதிர்காலத்தைத்தானா தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்கால சந்ததியினருக்கு அன்பளிப்பாக வழங்கப்போகின்றது?

அறுபத்தெட்டு வருடகால பெரும்பான்மையின் ஒற்றையாட்சி, ஜனநாயக ஆட்சியில் இருந்தும், முப்பது வருடங்களுக்கு மேலான விடுதலைப் போராட்ட வரலாற்றினூடும் நாம் கற்றுக்கொண்டதுதான் என்ன?

அவ்வாறெனில், இன்னொரு வரலாற்று சக்கரத்திற்குள் எம்மவர்களை நாம் பலிகொடுக்க தயாரா?
பிடல் காஸ்ரோவின் 'வரலாறு என்னை மன்னிக்காது' என்னும் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது.


நிலைமாறுகால நீதியின் இரு பரிமாணங்கள்


நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் சர்வதேசமயப்படுத்ப்பட வேண்டும். அதேவேளை தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வ இயைபு படுத்தப்பட வேண்டும்.

நிலைமாறுகால நீதிப்பொறிமுறை சர்வதேச மயப்படுத்தப்படவேண்டும் எனக் குறிப்பிடுவது சர்வதேச மயப்படுத்தல்தான் ஒரு நாட்டின் குறிப்பாக ஸ்ரீலங்காவின் அரசியல் தலைமை குற்றவியல் நீதி (Criminal Justice) அல்லது குற்றவியல் வழக்கு (Criminal Prosecution) தொடர்பில் இழுத்தடிப்பு யுக்தியை அல்லது அரசியல் விருப்பை அல்லது அரசியல் அர்ப்பணிப்பை காட்டத்தவறும் தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கப்போவது.

நியுரம்பேக் (Nuremberg) மாதிரி நிலைமாறுகால நீதி பொறிமுறை முன்னெடுக்கப்படுவது இழைக்கப்பட்ட குற்றங்களின் காத்திர தன்மையை வெளிக்கொணர்வதற்கு சர்வதேச பங்காளர்கள் மிகவும் அவசியமானவர்கள்.

சர்வதேச தீர்ப்பாயங்களின் பரிணமிப்பும், சர்வதேச குற்றவியல் மன்றின் உருவாக்கமும், கலப்பு நீதிமன்றுகளும், கூற வரும் செய்தி - பட்டறிவு அடிப்படையின்பால் கட்டமைக்கப்பட்டமை என்பதை தமிழ் சமூகம் கவனிக்கத் தவறியதா? இல்லை தெரிந்துகொண்டும் ஏப்பம் விடத்துணிந்ததா, என்பது தெரியவில்லை.

ஸ்ரீலங்காவின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை சர்வதேச மயப்படுத்தப்படும்போது அதன் பங்காளிகளாக ஐ.நா சபையும், ஏனைய சர்வதேச சுயாதீன ஆர்வலர்களும், நிபுணர்களும், நிபுணத்துவமும் அவர்களின் ஈடுபாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் என்ற நம்பிக்கையை உறுதி செய்யக்கூடும்.

ஸ்ரீலங்காவின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை வெற்றி பெற்றவர்கள், குற்றம் செய்தவர்கள், இணைந்து, கட்டமைத்த பொறிமுறை.

அது மேல் இருந்து கீழ் நோக்கிய திணிப்பு சார் முறையியலைக் கொண்டது. தற்போது வரைக்கும் நிதி வழங்குநர் மையப்படுத்தி முடுக்கிவிடும் (Donor driven) செயன்முறையாகவே அது இருந்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் மைய முறையியல் அகற்றப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களை அந்நியப்படுத்தி மத்தியில் இருந்து விளிம்பு நோக்கி நகரும் பொறிமுறையின் ஏற்புடைத் தன்மை பிரச்சினைக்குப்படுத்தப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்திய முறையியல் உள்வாங்கப்படும்போது, மக்கள் எது சார்ந்து நகருகின்றனர் என்பது தெரியவரும்.

தற்போதுள்ள சர்வதேச சட்ட அமைவுகளுக்;குள் மன்னிப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதும் குறிப்பாக திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்ற (System crimes) கூட்டுத்தன்மை வாய்ந்த குற்றங்களுக்கு குற்றவியல் நீதியின் பல்வேறு பரிமாணங்கள் உற்று நோக்கப்பட வேண்டும்.

குற்றவியல் நீதி குணமாக்கும் தன்மையுடையது. உண்மையை வெளிக்கொணர்கின்றது. ஏற்கனவே இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள், திட்டமிடப்பட்ட படுகொலைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் பாதிக்கப்பட்டவர்களின் நன்மதிப்பையும், உதிரியான கூட்டான இருப்புரிமையை, சட்டம் ஒழுங்கை, மீள் நிகழாமையை உறுதிப்படுத்த குற்றவியல் நீதி பயன்படுத்தப்படுகின்றது. அதுவே நல்லிணக்கத்தையும் கொண்டுவரும்.


நிலைமாறுகால நீதியும் தமிழ் தேசியமும்


நிலைமாறுகால நீதிப்பொறிமுறை சட்டம் மட்டும் சார்ந்ததல்ல. அது ஏனைய அறிவியல் நெறி சார்ந்ததும்கூட.
உதாரணமாக பெண்ணியம், அரசியல் விஞ்ஞானம், மரபணு, உளவியல், பொருளாதாரம், மானிடவியல், சமூகவியல் சார்ந்தது.

நிலைமாறுகால நீதிப் பொறிமுறை சட்டம் மட்டுமே சார்ந்தது எனக்கூறி சட்டவாளர்கள் தனியுரிமை கொண்டாட முடியாது.

ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்க்கப்பட்ட குற்றங்களுக்கு ஓர் அடையாள அரசியல் உண்டு.

தமிழர் படுகொலை செய்யப்பட்டதும், வன்புணரப்பட்டதும், கடத்தப்பட்டதும், சித்திரவதை செய்யப்பட்டதும், அவர்கள் தனி உதிரிகள் என்பதற்காக அல்ல மாறாக அவர்கள் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே.

ஸ்ரீலங்காவை பொறுத்தவரையில் பொறுப்புக் கூறல் என்பது அடையாள அரசியல் சார்ந்தது. தமிழ் மக்கள் என்ற அடையாளத்தைக் கொண்டிருந்ததற்காக மட்டுமே இறுதி யுத்தத்திலும் அதற்கு முன் நடந்தவற்றிலும் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

திட்டமிடப்பட்ட குற்றங்கள் பற்றி வலியுறுத்தும்போது நடந்தேறிய குற்றங்கள் கூட்டு அடையாளம் சார்ந்தது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என நம்புகிறேன். இவ் அடையாள அரசியல் மீளுயிர்ப்பிக்கப்பட்டு கூட்டு இருப்பு வலியுறுத்தப்பட வேண்டும்.

நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் நோக்கு கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறல் பொறிமுறையை உருவாக்குவதாகும். அதே நேரத்தில் இந்த பொறுப்புக்கூறும் பொறிமுறை மீள்நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.

மீள் நிகழாமையை உறுதிப்படுத்த நிறுவன கட்டமைப்பு மாற்றங்கள் அரசியல் தீர்வு, பிரச்சினைக்கான மூலகாரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளல், இவற்றுள் தமிழ்த் தேசியம் சார்ந்த வினாக்களுக்கு விடைகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை திட்ட வரையறைகளுக்குள் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படுகின்றது என்றால் அதற்கென தனிநோக்கமுண்டு.

இவ்வரலாற்றுத் தருணத்தில் அரசியலமைப்பு மாற்றத்திற்கு தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடப்பாடு உண்டு.

இந்த மீள்நிகழாமைக்குள்தான் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை தமிழ்த் தேசியக் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாத நிலைமைக்குள் தள்ளப்படுகின்றது.

தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்பட்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறை தமிழர்களுக்கு ஓர் தீர்வாக அமையப்போவதில்லை.

No comments:

Post a Comment