July 19, 2016

83 ஜூலை கலவரத்திற்கு பின் இந்த ஜூலையில் மூடப்பட்ட புறக்கோட்டை கடைகள்!

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது மூடப்பட்ட புறக்கோட்டை வர்த்தக நிலையங்கள் மீண்டும் இந்த வருடம் ஜூலை மாதமே மூடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


பெறுமதி சேர் வரி திருத்தம் காரணமாக சில்லறை மற்றும் மொத்த விற்பனைக்கு அறவிடப்பட்ட வரி காரணமாக இந்த ஜூலையில் இவ்வாறு புறக்கோட்டையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு புஞ்சி பொரல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் முஹிபுர் ரஹ்மான் போன்றோர் அண்மையில் புறக்கோட்டை நகருக்கு சென்று வர்த்தக நிலையங்களை மூட வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசாங்கத்தில் உள்ள சிலர் கடைகளை ஏன் மூடுகின்றனர் என்ற உண்மையான பிரச்சினையை அறிந்து கொள்ளாமல், கடைகளை மூட போகும் வர்த்தகர்களை தேடிச் சென்று அவர்கள் தொடர்பில் வேறு நடவடிக்கை எடிடுக்க முயற்சித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை செயற்படுத்துவதையே அரசாங்கம் செய்ய வேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தில் பெறுமதி சேர் வரி 11 வீதமே அறவிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகத்திற்கு பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அரசுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இருக்கும் நாட்டின் நிதி அதிகாரத்தை நிதியமைச்சர் தான்தோன்றித்தனமாக தனக்குரிய அதிகாரமாக கருதி செயற்பட்டதன் காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment