சிறிலங்காவுக்கு இன்று உலகில் எதிரிகளும் இல்லை, சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.கிளிநொச்சியில் நேற்று
இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“உலகிலுள்ள அனைவரும் எம்முடன் நட்பாக உள்ளனர். அவர்கள் எங்களோடு சேர்ந்து செயற்படுகின்றனர். எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை. எதிராக செயற்படுகின்றவர்களும் இல்லை.
இந்தியா, பாகிஸ்தான், பிரித்தானியா, சீனா, ஜப்பான் என எல்லோரும் எங்களுடன் இருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே நல்ல சூழலாக அமைந்துள்ளது.
இதுதான் சரியான யுகம். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்க வேண்டும்.
எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனை பேச்சுக்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
வடக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
எனவே தான் நாங்கள் அனைவரும் ஆக்கபூர்வமான பேச்சுகளை மேற்கொண்டு எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நாட்டில் வாழ்கின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாக சகோதரத்துவதோடு வாழ்கின்ற சூழலை உருவாக்குவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
எமது நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் நிறுவனங்களும் தங்களுடைய உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
சிறிலங்காவில் வறுமையை இல்லாதொழிக்கும் நோக்கில் பயிரிடக்கூடிய அனைத்து நிலங்களிலும் பயிர்செய்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு பயிர்செய்கைக்கு பயன்படுத்தாது வெறுமையாக உள்ள அரச மற்றும் தனியார் நிலங்கள் அரசினால் மீளப்பெறப்பட்டு அவை உற்பத்தியில் ஈடுப்படக் கூடியவர்களுக்கு வழங்கப்படும்.
இதுவரை காலமும் வெறுமையாக வைத்திருந்த நிலங்களை உற்பத்திக்கு பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.
சிறிலங்காவைப் பொறுத்தவரை எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பல பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி இறக்குமதி துறையில் சிறிலங்கா மிக மோசமான நிலையில் இருக்கிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவில் உற்பத்தி செய்யக் கூடிய பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்காக 6000 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதனை தவிர்த்து அதனை இங்கேயே உற்பத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.
அடுத்து வரும் ஆண்டுகளில் சிறிலங்காவில் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்ய இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment