July 28, 2015

சுமந்திரனை நாடாளுமன்றுக்கு அனுப்புவது தமிழ் மக்களின் கடமையாம் – சம்பந்தனும் மாவையும் தெரிவிப்பு!

தமிழினத் துரோகி என்று வர்ணிக்கப்படும் சுமந்திரனை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்புவதற்கு பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வரும் சம்பந்தன் அவருக்கு ஆதரவாக பருத்தித்துறையில்கூட்டம் ஒன்றை
நடத்தியுள்ளார். சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என்று இந்தக் கூட்டத்தில் சம்பந்தன் தெரிவித்தார்.
பருத்தித்துறை நடராஜா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்;கு சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அடுத்து அமையவிருக்கின்ற நாடாளுமன்றம் ஒரு ஸ்திரமான நாடாளுமன்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான தீர்க்கமான சந்தர்ப்பம் உருவாகும் என்று நாங்கள் நம்புகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் போன்றவர்களின் பங்களிப்பு மிக அதிகமாக தேவைப்படும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாக அணுகி தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே தற்பொழுதைய காலத்தில் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்றதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான அணுகுமுறையாகும்.
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இந்த அணுகுமுறைக்கு மகத்தான வரவேற்பு இருக்கின்றது. இதற்கமைய, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாக அணுகுவதில் தம்பி சுமந்திரன் கடந்த காலங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார். தொடர்ந்தும் வழங்கி வருகின்றார். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் எங்களுடைய பிரச்சனைகளை கூறி, அவற்றுக்கான தீர்வுகளை எடுத்துரைக்கின்ற சந்தர்ப்பத்தில், சட்ட நுணுக்கமும் அறிவுப்பின்புலமும் உள்ள சுமந்திரன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில்,
வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த வாக்களிப்பின் பயனாக நாம் சுமந்திரனை கடந்த நாடாளுமன்றத்துக்கு அனுப்பினோம். வலிகாமத்தின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக அணுகுவது முதல் சம்பூரின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக வென்றெடுப்பது வரை சுமந்திரனின் பங்களிப்பு மிக மகத்தானது.
அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச அரங்கிலே அங்கிகரிக்கப்பட்ட ஒரு விடயமாக மாற்றியமைத்த பெருமையும் சுமந்திரனையே சாரும். தமிழ் மக்களின் உணர்வுகள், பிரச்சினைகள் போன்றவற்றை தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றிற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளை பெறுவதை நோக்கி செயலாற்றுகின்ற ஒருவரே சுமந்திரன் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment