February 16, 2015

மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி!

புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக, அவருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர் பிரச்சினை மற்றும் அதுபற்றிய இந்திய நிலைப்பாடுகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இந்தச் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை, 13வது திருத்தச்சட்டம், போர்க்குற்ற விசாரணை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இந்தச் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமரோ, சிறிலங்கா அதிபரோ, தமிழர் பிரச்சினை குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், திருமதி சிறிசேனவையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் முதல் அனைத்துலக பயணத்திற்கு நீங்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்ததில் எங்களுக்கு பெருமை.
இந்திய மக்கள் சார்பில் உங்களின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஒருங்கிணைந்த, அமைதியான, செழிப்பான நாட்டை உருவாக்குவதில் உங்கள் மக்களின் கனவுகளை பிரதிபலிக்கிறது.
சிறிலங்கா, இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர். இந்திய மக்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.
வரலாறு, மதம், கலாச்சாரம் ஆகியவற்றில் காலகாலமாக உள்ள இணைப்பு நமது உறவுக்கு திடமான அடித்தளத்தை அமைத்துள்ளது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்பு, மண்டல கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் நாம் ஆர்வம் காட்டி வருகிறோம்.
நமது இலக்கு ஒன்றுக்கு ஒன்று இணைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். நமது பாதுகாப்பும் செழிப்பும் பிரிக்க முடியாதவை.
சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நானும் இரு நாடுகள் உறவு மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்து பேசினோம்.
நானும் அவரும் நமது பொருளாதார ஒத்துழைப்பில் உள்ள பரவலான வாய்ப்புகளை நாங்கள் கொண்டு வருவோம்.
சிறிலங்காவின் பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்புகள் உள்ளது என்பதை நான் அறிவேன். இரு திசைகளிலும் சமமான வளர்ச்சிக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.
சிறிலங்காயில் இந்திய முதலீட்டை அதிகரிக்கவும் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகரிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நான் தெரிவித்துள்ளேன்.
எரிசக்தித் துறையில் (பாரம்பரிய மற்றும் புதுப்பிக்க கூடிய) ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.
இருநாட்டின் வர்த்தக உறவை ஆய்வு செய்ய நமது வர்த்தக செயலர்கள் விரைவில் சந்திக்க உள்ளனர்.
இந்தியா – சிறிலங்காக்கு இடையேயான விமான மற்றும் கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த உள்ளோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான சிவில் அணு ஒப்பந்தம் நம் இருவருக்கும் இடையேயான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சிறிலங்கா கையெழுத்திட்டுள்ள முதல் ஒப்பந்தம் இது.
விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு தரும் வகையில் இது உள்ளது.
பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்யவும் நானும் சிறிலங்கா அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளோம்.
மாலைத் தீவுகளுடனான முக்கோண கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சியை நாங்கள் வரவேற்றுள்ளோம்.
சிறிலங்காவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய உதவி திட்டம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதில் வீட்டு வசதி திட்டமும் அடங்கும்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 27,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி எனக்கும் சிறிலங்கா அதிபருக்கும் திருப்தி அளித்துள்ளது.
சிறிலங்காவுடனான கூட்டு வளர்ச்சியில் இந்தியா உறுதியாக இருக்கும் என்று அதிபருக்கு நான் உறுதி அளித்துள்ளேன்.
உட்கட்டமைப்பு துறை உட்பட பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.
வேளாண் துறையில் உள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மீனவர்கள் பிரச்சினைக்கு நானும் அதிபரும் அதிக கவனம் செலுத்துகிறோம். இது இரு தரப்பிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
அதனால், இந்த பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான மனிதநேயமிக்க அணுகுமுறை வேண்டும் என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
இரு தரப்பிலும் உள்ள மீனவர்கள் சங்கம் விரைவில் சந்திக்க நாங்கள் ஊக்குவிப்போம். இரு அரசும் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் தீர்வு காண வேண்டும்.
கிரிக்கெட் போல கலாச்சாரமும் நமக்கு உறவை வலுவாக்குகிறது.
இன்று கையெழுத்துதிடப்பட்டுள்ள கலாச்சார ஒத்துழைப்பு நிகழ்ச்சி, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும் தொடர்பையும் வளர்க்கும். நாலந்தா பல்கலைகழக திட்டத்தில் இப்போது சிறிலங்காவும் பங்கேற்க உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறிலங்காவில் அர்ஹத் மகிந்தவாக அறியப்படும் இளவரசர் மகிந்தவும் அவரின் சகோதரி சங்கமித்தவும் 2300 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்துள்ள தொடர்பை நினைவுக்கு கொண்டுவருகிறது.
புத்த மதத்தின் தூதராக அவர்கள் சிறிலங்கா சென்றனர்.
கபிலவஸ்த்திற்கு மரியாதை செலுத்த சிறிலங்கா மக்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கான நுழைவு கட்டணத்தை குறைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
சிறிலங்கா வருமாறு அதிபர் எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். அந்த அழகான நாட்டிற்கு மார்ச் மாதத்தில் நான் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.
சிறிலங்கா அதிபர் சிறிசேனாவை இந்தியாவிற்கு நான் மீண்டும் வரவேற்கிறேன்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதற்கான முன் எப்போதும் இல்லாத வாய்ப்பு அமைந்துள்ளது.
அதிபர் சிறிசேனவின் பயணம் இதற்கான திசையில் நம்மை திடமாக அமர்த்தி உள்ளது” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment