மகிந்த
ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவரும், அதிபர்
தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அவரைத் தோற்கடிக்க, சிவில்
சமூக அமைப்புகளை ஒன்றிணைத்தவருமான, பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி
நேற்று கொழும்பில் தாக்கப்பட்டு காயமடைந்தார
கிருலப்பன லலித் அத்துலத்முதலி மைதானத்துக்கு அருகிலேயே நேற்றுமாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கிருலப்பன லலித் அத்துலத் முதலி மைதானத்தில் நேற்று பிற்பகல், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஸ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளின் மேதினக் கூட்டம் இடம்பெற்றது.
இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களே, கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரும், சமூக செயற்பாட்டாளருமான பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறியை தாக்கியுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையினர் அவரை மீட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக, குரல் கொடுத்து வந்த பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக, சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைப்பதில் தீவிரமாக பங்காற்றியவர்.
அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியவராவார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் மதிக்கப்படும் சிறிலங்காவின் சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான பேராசிரியர், நிர்மல் ரஞ்சித் தேவசிறி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கொழும்பு வருவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக தாக்குலுக்குள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment