July 1, 2014

விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் -வைகோ

மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் கனிசமாக அதிகரிப்பதுடன் இதன் எதிரொலியாக விலைவாசியும் உயரும். இரயில் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், சாதாரண ஏழை எளிய மக்கள் தங்கள் மீது பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ள நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மேலும் பாதிப்பு அடையும் நிலை ஏற்படும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2010 ஜூன் மாதம் முதல் பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் பொறுப்பையும், 2013 ஜனவரி மாதம் முதல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. அதிலிருந்து பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டு வருகின்றன.

காங்கிரÞ கூட்டணி அரசு பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதால்தான் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்தன. இதன் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட முடியாமல் விலைவாசி அதிகரித்து வந்தது.

எனவே மத்திய அரசு உடனடியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை மாற்றி அமைத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை மீண்டும் மத்திய அரசு ஏற்க வேண்டும். விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’    வைகோ
சென்னை - 8    பொதுச் செயலாளர்,
01.07.2014    மறுமலர்ச்சி தி.மு.க

No comments:

Post a Comment