July 29, 2016

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் தமிழர்களைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டது:பத்மநாதன் சத்தியலிங்கம்!

நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தமும் அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும் எமது சமூகத்தை மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்கள் எனவும் தமது தேவைகளை தாங்களே தேடிக்கொள்பவர்கள் எனவும் குறிப்பிட்ட அவர்,

எனினும் நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான யுத்தம் மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து மீண்டும் மீண்டும் இடம்பெயர வைத்ததனால் பொருட்சேதம், உயிர்சேதமென அனைத்தையும் இழந்து உழைப்பை இழந்தவர்களாக மற்றவர்களிடம் தமது தேவைக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டார்.

எனினும் இதனால் மனம் தளரக்கூடாது. நாம் எவற்றை இழந்தாலும் எம்மிடமிருந்து பிரிக்கமுடியாதது கல்விமட்டுமே. உங்கள் பெற்றோர் பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள்.

ஆனாலும் உங்களை சமூகத்தில் சிறந்த கல்விமான்களாக ஆக்குவதற்காக கனவுகளை சுமர்ந்தவர்களாக உங்களை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். படிக்கும் காலத்தில் உங்கள் கடமைகளை சரிவரச்செய்யுங்கள், அப்போதுதான் உங்கள் பெற்றோர்களின் கனவுகளை நனவாக்கமுடியும் என சுகாதார அமைச்சர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment