July 19, 2016

திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா?: வைரமுத்து!

திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல தமிழருக்கு அது பெருமைதான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். அதன்பேரில் தமிழ்நாட்டில் இருந்து 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயார் செய்து ஹரித்துவாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் சிலை நிறுவ கொண்டு செல்லப்பட்ட போது உள்ளூர் பூசாரிகள், சில கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிக பக்தர்கள் திரளும் இடத்தில் திருவள்ளுவர் சிலையை அமைக்க கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் திருவள்ளுவரை தலித் என்று கூறிய சர்ச்சையும் எழுந்துள்ளது. இதன் காரணமாக 12 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றி கயிற்றால் கட்டி ஹரித்துவாரில் உள்ள மேலபவன் அலுவலகம் முன்பு கீழே போட்டு வைத்துள்ளனர்.

திருவள்ளுவருக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ’’திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல தமிழருக்கு அது பெருமைதான்.

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தமிழர் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சிலை அவமதிப்பு விவகாரத்தில் உத்தராகண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழறிஞர், தமிழ் அமைப்புகள் இணைந்து சிலையை மீட்டெ டுக்கும்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment