July 12, 2016

யாழ்.வலி,வடக்கு மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!

யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு மாவிட்டபுரம் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.


குறித்த காணியில், தலா 25லட்சம் ரூபாய் பெறுமதியான 100 வீடுகளை அமைப்பதற்கான பணிகளை யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

உள்ளக இடப்பெயர்வு காரணமாக கடந்த 26 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் குடித்தொகை பெருக்கத்தினால் பல குடும்பங்கள் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத நிலையில், நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்தனர்.

அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரகாரம் மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை - சீமெந்து தொழிற்சாலை காணியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த காணிகளிலேயே படையினர் சுமார் 100 வீடுகளை முதற்கட்டமாக நிர்மானித்து கொடுக்கவுள்ளனர்.

ஒவ்வொரு வீடுகளும் தலா 25 லட்சம் ரூபா பெறுமதியானவை என்பதுடன், மின்சாரம், குடிநீர், மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றுடன் இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

குறித்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் யாழ்.மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment