ஊடக இல்லம்:- தமிழீழத்திற்கு சென்றமையை நினைவுபடுத்தும் ஆவணங்கள் உங்களிடம் உள்ளனவா?
புகழேந்தி:- எல்லாமே முடிஞ்சு போச்சு என்று 2009 மே மாதம் திட்டமிட்ட பொய்ப் பரப்புரையை இலங்கை அரசு செய்தது. பொதுவாக இலங்கை அரசு இப்படி ஒரு
பிரச்சாரத்தை செய்ததும் அதற்கு இந்திய அரசு ஒத்தூதுவதும் எதற்காக என்று பார்த்தால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் மன உறுதியை குலைத்துவிடவேண்டும். இதுதான் அவர்களுடைய நோக்கம். வேறு எந்த நோக்கமும் கிடையாது. எல்லாம் முடிஞ்சு போச்சுன்னா, ஒட்டுமொத்த தமிழினமும் அப்படியே மனசுடைந்து இருந்துடுவாங்கள் என்று பார்த்தாங்கள். அப்படி பொய்ப் பரப்புரை எல்லாம் முடிஞ்சுபோச்சு.
எனக்கு, உள்ளுக்குள்ளே ஒரு தவிப்பு இருந்து கிட்டே வந்தது. சில அறிகுறிகளைப் பார்க்கும்போது, நடந்த செய்திகளைப் பார்க்கும்போது, இதெல்லாம் பொய்ச்செய்தியாக இருக்கும் என்றுதான் தோன்றுகின்றது. உதாரணமாக ஆறறிவு இருக்கின்ற சாதாரண மனுசனுக்கு எழுகிற சந்தேகம் எனக்கும் தோன்றியது. ஏன் அவர்கள் காட்டிய ஒரு புகைப்படத்தை அதாவது பிரபாகரனின் உருவம் என்று ஒரு புகைப்படத்தைக் காட்டினார்கள். குறித்த புகைப்படத்தை ஏன் சர்வதேச ஊடகங்கள் எதுவும் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது முதல்கேள்வி. ஒரு சர்வதேச ஊடகங்களும் அந்த புகைப்படத்தை எடுக்கவில்லை. இலங்கை இராணுவம் மட்டும் மூன்றே மூன்று கோணங்களில் படம் எடுத்தது. சிலவேளை நாலாவது கோணத்தில் படம் எடுத்தால் அது வேறு ஒருவருடையது என்று தெரிந்துவிடும் என்று நினைத்தாங்களோ என்னவோ. மூன்றே மூன்று கோணத்தில் இலங்கை இராணுவத்தினர் மட்டும் எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
உண்மையிலேயே பிரபாகரன் இறந்திருந்தால், கொல்லப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஊடகவியலாளர்களையும் அனுமதித்திருப்பார்கள் அல்லவா? இது இரண்டாவது கேள்வி. அடிப்படையில் இந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. எல்லாம் முடிஞ்சுபோச்சு என்றார்களே, நான் 2002 இறுதியில் ஈழத்துக்குப் போனபோது, எல்லோரையும் சந்தித்தேன். அந்தவேளையில் பிரபாகரனையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புகைப்படம் எடுத்துக்கொள்கின்றோம். எல்லா நண்பர்களும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றோம். அப்போது எங்ககூட வந்த நண்பர் ஒருவர் மிக ஆர்வத்துடன் கேட்டார், “இந்தப் புகைப்படம் எங்களுக்குக் கிடைக்குமா?” என்று. உடனே பிரபாகரன் தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் சற்றும் யோசிக்காமல் அந்த நிமிடமே, “ஏன் மீனம்பாக்கம் சென்று இறங்கும்போது ஆதாரத்துடன் இறங்கப்போகின்றீர்களா...” என்று திருப்பிக் கேட்டார். நாங்கள் எல்லாம் சிரித்தோம். இதை என்னால் மறக்க முடியவில்லை. நாங்கள் சிரித்ததெல்லாம் கூட புகைப்படமாகப் பதிவாகியுள்ளது.
எல்லாமே மே மாதம் 2009 இற்குப்பின்னர் முடிந்து விட்டது என்று சொன்னார்கள். ஆனால், 2009 டிசெம்பர் மாதம் இரண்டு நண்பர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். ‘ஐயா எங்க இருக்கிறீர்கள்..?’ என்றார்கள். ‘சென்னையில்தான் இருக்கின்றேன்’ என்றேன். ‘உங்களிடம் ஒரு பொருள் ஒப்படைக்க வேண்டும்’ என்றார்கள். சரி என்று அவர்களை ஓர் இடத்திற்கு வரும்படி அழைத்து அங்கு சந்தித்தேன். அவர்களின் பேச்சைவைத்து ஈழம் தொடர்பான ஈழத்து உறவுகள் என்று தெரிந்தது. அவர்கள் என்னிடம் காணொளி இறுவெட்டு ஒன்றை ஒப்படைத்தார்கள். எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிவித்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அந்த இறுவெட்டு எனக்குக் கிடைத்தது.
அந்த காணொளியை நான் வீட்டுக்குக் கொண்டு சென்றேன். செல்லும் போது எனக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது தெரியுமா? ‘பிரபாகரன்தான் பேசி ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். கண்டிப்பாக அந்த மனிதர் இருக்கின்றார்’ என்ற நம்பிக்கையோடு அந்த இறுவெட்டை போட்டுப் பார்த்தேன்.
அது 2002 நான் ஈழத்தில் பிரபாகரனுடனும் அன்ரன் பாலசிங்கம் மற்றும் உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அடங்கிய இறுவெட்டு. எல்லாம் முடிந்து விட்டது. இயக்கமே இல்லை என்றார்கள். இயக்கமே இல்லாமலா புகழேந்தி என்கின்ற சாதாரண ஒரு தெருப்பாடகனுக்கு 2002 இல் எடுத்த புகைப்படம் வந்து சேருகின்றது. எதுவுமே முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை அது மேலும் வலுப்படுத்தியது. அதற்குப்பிறகு ஐயா பொன் தியாகம் அவர்களைப் பார்க்கும்போது என்ன என்ன சம்பவங்கள் நடந்தது என்று கேட்டு நான் மெய்சிலிர்த்து நின்றபோது, ஒன்றுமே நடக்கவில்லை. என்னென்ன நடக்கவேண்டுமோ எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்துகொண்டேன்.
ஒரு விடயத்தை நான் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்வேன். சில இடங்களில் மழைபெய்தவுடன் மணற் பகுதியில் ஆறுமாதிரி வெள்ளம் ஓடும். இரண்டு பக்கமும் வாகனங்கள் எல்லாம் நின்றிடும். வாகனங்கள் உள்ளே போகமுடியாது. வாகனங்கள்போக வழி இருக்காது. வழிமுழுக்க வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கும். மூன்று நாட்களுக்குத்தான் தண்ணி இருக்கும். `சல சல’ என்று ஆரவாரமாக ஓடும். மூன்று நாளால அந்த இடத்தில் தண்ணீர் ஒரு சொட்டும் இருக்காது. மீண்டும் போக்குவரத்து நடக்கும். அதற்குப்பெயர்தான் காட்டாற்று வெள்ளம். விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது காட்டாற்று வெள்ளம் அல்ல. அது கட்டுப்படுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, ஓர் அணைக்குள் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் இருக்குமே. அந்தமாதிரி முறைப்படுத்தப்பட்டுள்ள நீர். ஆகையால்தான் நான் அடிக்கடி சொல்லுவேன், இந்தக் காட்டாற்று வெள்ளம் சல சல என்று சத்தம் போட்டபடி ஓடும் காணாமல் போய்விடும்.
ஆனால், ஆழமான ஆறு இருக்கின்றதே. இந்தியாவில் நர்மதா ஆறு இருக்கின்றது. தொடருந்துக்கு ஒரு பத்து நிமிடம் பிடிக்கும் அந்த ஆற்றுப்பாலத்தைக் கடப்பதற்கு. அந்த ஆற்றுப் பாலத்தைக் கடக்கும்போது கீழே பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். மிகப்பெரிய ஆறு அப்படியே அமைதியாக இருக்கும். அமைதியாக இருக்கும் எதுவுமே ஆபத்தானவை என்பதை நாம் உணரவேண்டும். பொதுவாக மர்மமாக இருக்கும் விடயங்கள், அமைதியாக இருக்கும் விடயங்கள், ஆழமாக இருக்கும் விடயங்கள் ஆரவாரம் செய்வதில்லை.
ஓர் அமைப்பு அமைதிகாக்கின்றது. ஓர் அமைப்பு பொறுமைகாக்கின்றது. சரியான சந்தர்ப்பம் சர்வதேசத்தின் மூலம் வரவேண்டும் என்று சந்தர்ப்பம் என்றுகூடச் சொல்லமுடியாது. சர்வதேசத்தின் மூலம் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பார்த்திருக்கின்றது. இன்று இத்தனை வருடங்கள் கழித்துத்தானே இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அது விடுதலைப் போராட்ட அமைப்பு என்று சொல்வதற்கு அதற்கு முப்பது வருடங்கள் எடுத்துள்ளது. அந்தமாதிரி சர்வதேசத்திற்கு நேரம் வரும். அதுவரை அமைப்பு அமைதியாகத்தான் இருக்கவேண்டும் என்றுநான் நம்புகின்றேன்.
அந்த இறுவெட்டு எனக்குக் கிடைத்தபோது நான் அதைத்தான் உணர்ந்தேன். ஓர் ஆழமான ஆறு அமைதிகாப்பது போல, ஒரு சாதாரண கலைஞனுக்கு ஒரு படைப்பாளிக்கு அவர்கள் எதைக் கொடுக்கவேண்டுமோ, அதைக்கொடுக்கிறார்கள். ஒரு பத்துக்கோடி கொடுத்தால் கூட இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டேன். அந்தப் புகைப்படங்களை இதுவரை நான் எந்தப் பத்திரிகைக்கும் பயன்படுத்தியது கிடையாது. அது என்னுடைய தனிப்பட்ட விடயம். அது எனக்குக் கிடைத்த பெரிய ஒரு வாய்ப்பு. என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு சந்திப்பு நினைச்சிருப்பேனா? அப்படி ஒருவாய்ப்புக் கிடைத்தது. அதை என்னிடம் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். பட்சமாகக் கொடுத்து, ‘புகழ் அண்ணாவுக்கு’ என்று மேலே ஒரே வார்த்தை எழுதியிருந்தது. நல்ல அறிகுறி அது. அமைப்பு சரியாகத் தெளிவான முடிவெடுத்து அமைதியாக இருக்கின்றது என்று நான் அப்போது புரிந்துகொண்டேன்.
ஊடக இல்லம்:- ஓர் ஊடகவியலாளனாய் உங்களுக்குள்ள அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
புகழேந்தி:- நான் ஒரு 18 ஆண்டுகள் தினமணி பத்திரிகையில் இருந்தேன். 1998 ஆம் ஆண்டு தினமணியை விட்டு விலகிவிட்டேன். அக்காலப் பகுதியில் எனக்கும் தினமணிக்கும் இடையில் ஆத்மார்த்தமான நட்பு - தொடர்பு - இருந்து வந்தது.
நான் பட்டப்படிப்பு படித்து முடித்தபின்னர் (எம் ஏ) என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் வாத்தியார் வேலைக்குப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். சினிமாத்துறை, ஊடகத்துறைக்குப் போவதற்கே எனக்கு விருப்பம் இருந்தது. இதனால் தினமணியில் இணைந்துகொண்டேன். தினமணியில் இருந்து விலகிய பின்னர் 1998 இலிருந்து 2009 வரை 11 ஆண்டுகள் எந்தப்பத்திரிகைக்கும் எழுதவில்லை. நிறைய பத்திரிகை நண்பர்கள் கேட்டார்கள் ஏதாவது பத்திச் செய்தியாவது எழுதுங்கள் என்று. ஆனால் நான் இப்போ கொஞ்சம் கோபமா எழுதுறேன். நான் முன்னர் நிறைய நகைச்சுவை எழுதுவேன். அதனால்தான் பிரபாவின் நகைச்சுவை உணர்வும் எனக்குப் பிடித்திருந்ததற்குக் காரணமாக இருக்கலாம். தினமணியிலை வேறுபெயர்களில் நகைச்சுவை நிறைய எழுதி இருக்கிறேன். அது நிறையப்பேருக்குத் தெரியாது, யார் அதை எழுதுகிறார்கள் என்று. அதைவைத்தே நிறைய நிறைய எழுதுவதற்குக் கேட்டாங்கள். ஆனால், திரைப்படப் பணிகள் அதிகமானதால் எழுத நேரம் கிடைக்கவில்லை.
ஆனால் 2009 மே 19 இற்குப்பின்னர், மே 20 என்று நினைக்கின்றேன். புலம்பெயர் தேசத்தில் இருந்து வெளிவருகின்ற இணையத்தளம் ஒன்றில் நண்பர் ஒருவர் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையில் எழுதி இருந்தது என்னவென்றால், சம்பவம் நடக்கும் போது அவர் பக்கத்தில் நின்று பார்த்தது போல எழுதியிருந்தார். இந்த மாதிரி சாட்சியங்களை எல்லாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். தினமலர் பத்திரிகையில் அப்போது எழுதியிருந்தார்கள், பிரபாகரன் துப்பாக்கியை உருவினார். மாத்தையாவும் துப்பாக்கியை உருவினார். இருவரும் சுட்டுக்கொண்டார்கள். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று. 8 பத்தி செய்தி தினமலரில் வந்தது. அந்தப் பத்திரிகை இப்போதும் எனது வீட்டில் இருக்கின்றது. ஆதாரத்தோடு எழுதினார்கள். பக்கத்தில் இருந்து தினமலர் செய்தியாளர் பார்த்துக்கொண்டிருந்த மாதிரி எழுதினார்கள். அந்தமாதிரி புழுதிவாரித் தூற்றுபவர்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் போலும். இல்லை அவரு எல்லாம் முடிஞ்சு போச்சு என்று ஒரு புலம்பல், அந்தப் புலம்பலை நியாயப் படுத்துவதற்காக என்ன கொடுமை பாருங்கள். நாங்கள் எதிர் நிலையில் நின்று பேசுவதாகக் காட்டக்கூடாதாம். நான் புகழேந்திக்கு நண்பன், எனக்கு நண்பன் - உனக்கு நண்பன் - எல்லாருக்கும் நண்பன் என்று காட்டவிரும்பினாரு. ஆனால், அவர் மனுசனே கிடையாது. அவர் எழுதின கட்டுரை அப்படித்தான் இருந்தது. நான் சொல்வதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அவர் எழுதிய கட்டுரையில் இப்படித்தான் இருந்தது. ‘அவர் கடவுள், தெய்வம், ஆண்டவர்’ யாரு பிரபாகரன். ஆனால் கடைசி நொடியில்...
அதற்கு என்ன அர்த்தம். அந்தக் கடைசி நொடியில் இப்படி எல்லாம் நினைச்சிருப்பாரோ? அப்படி நினைச்சிருப்பாரோ, இப்படி நினைச்சிருப்பாரோ? என்று தாங்கள் ஊன்ற நினைத்த விச விதைகளை எங்கள் நெஞ்சில் ஊன்றினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என்னைக் கோபப்படுத்தியது. நீ என்ன சாட்சியா? அவர்கள் வெளியிட்ட புகைப் படத்தைப் பார்த்ததும் எனக்கு நிறைய சந்தேகம் வந்துவிட்டது. நீங்கள் முதல்ல கேட்டது போல, நான் உங்களுக்கு முன்னாடி சொன்னது போல ஒரே கேள்விதான். ஏன் சர்வதேச ஊடகங்களை அதைப் படம் எடுக்க அனுமதிக்கவில்லை? என்பதுதான். அங்கேயே ஆரம்பித்துவிட்டது சந்தேகம். ஏனென்றால் நான் ஒரு பத்திரிகையில் இருந்தவன். ஓர் அரசு ஓர் அதிகாரம் என்ன பண்ணும் என்று நான் கூட இருந்து பார்த்தவன். உண்மையிலேயே அது பிரபாகரனாய் இருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் அந்த சந்தேகத்தின் அடிப்படையில் எங்களுக்கு சந்தேகங்கள் இருந்தது. இவரு இப்படி எழுதியதும் எனக்குக் கோபம் எழுந்தது. அந்தக் காலத்தில் நாங்கள் வள்ளுவர் கோட்டத்தில் சந்திப்போம். 2008 நவம்பர் மாதத்தில் இருந்து வள்ளுவர்கோட்டத்தில் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொண்டோம். வள்ளுவர் கோட்டத்திற்குப் பக்கத்தில் நண்பர் ஒருவருடைய கடையில் கூடுவோம். நாங்கள் தொடர்ச்சியாகக் கூடும்போது, எங்களைக் கண்காணிப்பதற்கு உளவுத்துறை நபர் ஒருவரை அனுப்பினார்கள். நாங்கள் அவரைக் கூப்பிட்டுக் கேட்டோம். ‘நீங்கள் ரொம்ப நேரமா தேநீர் குடிக்கிறீங்களே. குடித்து முடித்துவிட்டீர்களா?’ என்று. அவர் தேநீர் குடித்துக்கொண்டே இருப்பார். அதற்குப் பிறகு நாங்கள் சந்திக்கும் இடத்தை மாற்றினோம். இடம் மாற்றப்பட்டதும். கண்காணிப்புக் குறைந்ததும் நாங்கள் மீண்டும் வள்ளுவர் கோட்டத்துக்கு வந்தோம்.
வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்தக் கட்டுரையைப் படித்து முடித்த அன்று, நான் சொன்னேன், அதில் இருக்கின்ற சந்தேகங்கள், இது என்ன உள்நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது, அதை எழுதிய நபர், ஏன் இப்படிப் ‘புழுதி’ வாரித் தூற்றுகிறார் என்பது பற்றி நண்பர்களிடம் சொன்னேன். அப்போது என்னுடைய நண்பர் கதிரவன் சொன்னார் ‘அண்ணா நீங்கள் எங்களிடம் பேசுவதை எழுதக்கூடாதா?’ என்று. அதற்கு நான் சொன்னேன் ‘இப்பொழுது உட்கார்ந்து எழுதிற மனநிலையிலா இருக்கின்றேன்..?’ என்று. அப்போது அவர் சொன்னார், ‘இல்லை... நீங்கள் சொல்றதை எழுதினால் சர்வதேசத்துக்கு ஒரு செய்தி சொல்றதாக இருக்கும்’ என்று.
அதன்படி அன்று எனது கணினியில் நானே தட்டச்சுச் செய்து எழுதிய கட்டுரைதான், அவர் சொன்னார் இல்லையா, அவர் மனுசனே கிடையாது, கடவுள், ஆண்டவர் என்று சொல்லிவிட்டு, அந்த ஆண்டவர் முகத்திலை ஒரு கரிபூச முயற்சி செய்தார். அந்த உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு நான் எழுதிய கட்டுரைக்குத் தலைப்பு, ‘கடவுள் இல்லை, பிரபாகரன் மனிதன்’. நான் அவரை மனிதனாக, மானுடனாகப் பார்க்கின்றேன். தன்னுடைய சக மனிதர்களுக்காகப் போராடிய ஓர் உண்மையான மனிதனாகப் பிரபாகரனைப் பார்க்கின்றேன். ஒரு மனிசனாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதி இருக்கவேண்டும் இல்லையா..? அத்தனை தகுதிகளும் பிரபாகரனிடம் இருந்தன. இப்படி எழுதுபவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. மனுசன் என்று சொல்வதற்கு இவர்களுக்குத் தகுதி இருக்கின்றதா? கிடையாது.
‘கடவுள் இல்லை பிரபாகரன் மனிதன்’ என்ற கட்டுரையிலே சிறீலங்கா அரசு செய்கின்ற பிரச்சாரம், பொய்ப் பிரச்சாரம் என்பதற்கு என்னென்ன காரணம் இருக்கின்றது என்பதையெல்லாம் பட்டியல் இட்டு இருந்தேன். அந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்து முடித்த பின்னர், எந்த இணையத்தளத்திற்கு அனுப்பலாம் என்று கேட்டபோது, நண்பர்கள் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாகச் சொன்ன இணையத்தளம் ‘சங்கதி 24’(www.sankathi24.com) என்று. அதற்கு அனுப்பிவையுங்கள் என்று. என்னுடைய கணினியில் இருந்து தான் அதைநான் அனுப்பிவைத்தேன். அனால் இதற்கு முன்னர் எனக்கும் ‘சங்கதி 24’ இணையத்தளத்திற்கும் எழுத்து ரீதியான தொடர்பு இருந்ததில்லை. தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆனால், கட்டுரைகள் அனுப்பியது இல்லை. முதல்முறையாகக் கட்டுரையை அனுப்பினேன். ஒரு மூன்று மணிநேரம் தான் இருக்கும். கதிரவன் தொலைபேசியில் சொன்னாரு, சங்கதி 24 இனை உடனே பாருங்கள் என்று. நானும் உடனே பார்த்தேன் சங்கதி 24 இணையத்தளத்தில் எனது கட்டுரை முகப்புச் செய்தியாக வந்திருந்தது. அடுத்த மறுகணமே எல்லா இணையத் தளங்களிலும் அது முகப்புச் செய்தியாக மாறியிருந்தது. நான் அனுப்பியது சங்கதி 24 இற்கு மட்டுமே. மற்றவர்கள் இதிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்கள். சரியான செய்தியை மக்களிடம் கொண்டுசெல்வதே ஊடகமாக இருக்கமுடியும். சரியான செய்தியை கொண்டு செல்வதற்கு எல்லோருமே சங்கதிக்கு உதவியதாக நான் நினைத்தேன். அதற்காக சங்கதி 24 இணையத்தளத்திற்கு நான் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.
ஊடக இல்லம்:- நீங்கள் சங்கதி 24 இல் எழுதிய கட்டுரைக்கு மறுப்புக்கள் ஏதாவது வந்ததா?
புகழேந்தி:- முதலில் எழுதிய நண்பர், எனது கட்டுரைக்குப் பின்னர் ஒரு மூன்று மாசத்துக்கு எதுவும் எழுதவில்லை. பின்னர் மூன்று மாதம் கழித்து மெல்ல மெல்ல புற்றில் இருந்து வெளியில் வந்ததுபோல வந்து, மறுபடியும் ஒரு விசயத்தை ஆரம்பித்தார். அதாவது புலிகளுக்கு ஆட்பலம் (Man power) இருந்தது. ஆயுத பலம் (weapons power)) இருந்தது. ஆனால், சாமர்த்திய பலம் (Smart power) இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
யாரைப் பார்த்து சொல்கிறாய் இப்படி ஒரு வார்த்தையை என்ற கோபத்தில் மீண்டும் Smart power பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இருந்தது என்பது பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். அதனையும் சங்கதி 24 இணையத்தளத்திற்குத்தான் அனுப்பியிருந்தேன். சங்கதி 24 அதற்குப் பொருத்தமான அழகான படங்கள் இணைத்து வெளியிட்டிருந்தது. எனக்கு நினைவிருக்கின்றது. றூஸ்வெல்ட் உடைய மனைவி சொன்ன கருத்தை நான் அதில் குறிப்பிட்டிருந்தேன். அந்த அம்மாவுடைய படம் எல்லாம் போட்டிருந்தார்கள். அந்தக் கட்டுரையையும் பெரிய அளவில் விரிவாக வெளியிட்டிருந்தார்கள். ஆனால் Smart power பிரபாவுக்கு இல்லை என்று எவ்வளவு பொய்யாக எழுதி இருந்த அந்த நபருக்கு எவ்வளவு உள்நோக்கம் இருந்துள்ளது. யாருக்கு Smart power இல்லை?
1991 இல் ஆனையிறவின் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதல் தோல்வியில் முடிவடைகின்றது. அது உண்மையாகவே புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு. பிரபா இதை எதிர்பார்க்கவேயில்லை. எத்தனை பேர் இறந்துவிட்டார்கள் என்பதை கேட்டதும் ஆடிப்போய்விட்டார். நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எப்படித் தோல்வியில் முடிந்தது? முதல்முறையாக பிரபாகரன் பெயர் குறித்தது அந்தத் தாக்குதலுக்குத்தான். ஆகாய கடல் வெளி சமர். அது எப்படித் தோல்வியடைந்தது என்றால், ஆனையிறவுத் தளத்தை புலிகள் தகர்த்துவிட்டார்கள். இருந்த இராணுவத்தை முறியடித்து விட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதத்தில், வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 10 ஆயிரம் சிப்பாய்களோடு சரத் பொன்சேகா இறங்கினார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் களநிலை அன்று அப்படி இருந்தது. இப்போது அமைப்பு எப்படி அமைதியாக இருக்கின்றதோ, எந்த அசைவும் இல்லாத மாதிரி இருக்கின்றதோ, அதே மாதிரி 1991 தோல்விக்குப் பின்னரும் புலிகளிடம் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது.
சிறீலங்கா நினைத்தது புலிகளை நசுக்கிட்டோம், இனிமேல் புலிகள் நிமிர்ந்துவர வாய்ப்பேயில்லை என்று. ஒரு மிகப்பெரிய தாக்குதலை முறியடித்துவிட்டதாக சிறீலங்கா நினைத்தது. 2000 ஆம் ஆண்டு வரை புலிகளிடம் ஒரு சின்ன அசைவும் இல்லை. 9 ஆண்டுகள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 9 ஆண்டுகள் கழிந்து 2000 இல் அவர்கள் நடத்திய தாக்குதல், அந்த வீரச் சமர் இன்று பாதுகாப்புக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. எப்படி ஆனையிறவு வீழ்ந்தது என்று. அன்று அவர்கள் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்களை இறக்கியபோது சிறீலங்கா அதிகாரிகள் எல்லாம் கேட்ட கேள்வி, பால்ராஜ்யையா இறக்கியுள்ளாங்கள், அவனை அனுப்ப முடியாதா? என்று சிறீலங்கா அதிகாரிகள் அதிர்ந்தார்கள். அப்புறம் முதன்முதலாக பிரபாகரன் செய்யச்சொன்ன வேலை, வெற்றிலைக்கேணி கடற்படைத்தளத்தை முதலில் அடித்தமை. சரத் பொன்சேகா ஆமியே வரமுடியாது குடாரப்பு, ஏ 9 சாலையை மறித்தார்கள். பலாலியில் இருந்து மேலதிக படைகள் வருவதைத் தடுத்தார்கள். அப்படித்தான் ஆனையிறவுத் தளம் வீழ்த்தப்பட்டது.
இரும்புக் கோட்டையாக இருந்த ஒரு தளத்தை விடுதலைப் புலிகள் தங்களது வீரத்தால் வீழ்த்தினார்கள். இதனை ஏன் சொல்கின்றேன் என்றால், இதெல்லாம் ஆயுதபலம், படைபலம், அறிவு இவையெல்லாம் இருக்கலாம். Smart power இல்லை என்று சொன்னார்களே. அந்த Smart power எங்கே வந்தது பிரபாகரனுக்கு என்றால் மிகப்பெரிய வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது, ஒரு வெற்றிவீரனாக இருந்தபோது, உலகே பார்த்து வியந்தது. எப்படி ஆனையிறவை வீழ்த்தினார்கள்? என்று உலகமே பார்த்து வியந்துநின்ற போது, பிரபாகரன் அறிவித்தார் போர்நிறுத்தம்.
உலகத்தில் எங்கும் நடந்திருக்குமா இது. தோல்வியில் அறிவிக்கவில்லை போர்நிறுத்தம். வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது அமைதிக்கான வாய்ப்பை அந்த வெண்புறா ஏற்படுத்திக்கொடுத்தது. இது தான் பிரபாகரனுடைய Smart power. இதனால் Smart power இல்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் நண்பர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் என்ன பண்பு, எல்லாரும் செய்வதுபோன்று திருத்தப்படுவார்கள். அது நடக்கும். அதற்காக சொல்கிறேன்.
Smart power இருக்கின்ற பிரபாகரனை நேரில் சந்திக்கக்கிடைத்த வாய்ப்பே, அனுபவமே என்னை இப்படி எழுத வைத்தது. எனது முதல் கட்டுரையை சங்கதி 24 இணையத்தில் பார்த்ததும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையில் என்னைத் தொடர்புகொண்டு கேட்டார்கள், உங்கள் கட்டுரையின் மாதிரி ஒன்றை அனுப்பும்படி. நான் அனுப்பிவைத்தேன். அவர்களுக்குப் பயம். நான் போட்டு அடித்துவிடுவேனோ என்று. ஏனென்றால் அது ஒரு பொது நிலையில் வரும் பத்திரிகை. நான் எனது முதல் கட்டுரையை அனுப்பினேன். உடனே அதன் பதிப்பாளரும், ஆசிரியரும் என்னை நேரில் அழைத்து, அரவணைத்து தொடர்ந்து நீங்கள் எழுதுவீர்களா என்று கேட்டார்கள். உண்மையில் சொல்கிறேன் இன்றுவரை திரைப்படம் எடுக்காத நாட்களில், என்னுடைய குடும்பப் பொருளாதாரத்தேப் பூர்த்தி செய்வது இந்தத் ‘தமிழக அரசியல்’ பத்திரிகை ஒன்றுதான். அவர்கள் என்னை மதிக்கிறார்கள், நான் அவர்களை மதிக்கிறேன். ‘உச்சிதனை முகர்ந்தால்’ படம் எடுத்தபோது, என்னால எழுதமுடியல. ஒரு சின்ன இடைவெளிவந்தது. அப்புறம் மீண்டும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இப்பொழுது அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு ‘இது இல்லையெனில் எது இனப்படுகொலை?’ என்று இரண்டு புத்தகங்களில் தொகுப்பாக வெளிவந்தது. தற்போது மூன்றாவது தொகுப்பு வரப்போகின்றது. இதற்கெல்லாம் அடிப்படை சங்கதி 24 இல் வெளிவந்த ‘கடவுள் இல்லை, பிரபாகரன் மனிதன்!’ என்ற கட்டுரை தான் என்பதை நன்றியுடன் நினைவுகூரவேண்டியிருக்கின்றது.
ஊடக இல்லம்:- புலம் பெயர்வாழ் எமது தமிழ் உறவுகளுக்கு ஊடக இல்லத்தின் வாயிலாகக் கூறவிரும்புவது?
ஊடக இல்லம்:- புலம் பெயர்வாழ் எமது தமிழ் உறவுகளுக்கு ஊடக இல்லத்தின் வாயிலாகக் கூறவிரும்புவது?
புகழேந்தி:- புலம்பெயர் சொந்தங்களை என்றும் அமைப்பு வேறுபடுத்திப் பார்க்கவில்லை. 1983 கலவரத்திற்குப் பின்போ அல்லது அதற்குப் பின்பு ஏற்பட்ட கலவரங்களில் தமது உறவுகளை இழந்து உடமைகளை இழந்து ஓர் இக்கட்டான சூழ்நிலையில் வந்திருக்கக்கூடும். ஒரு வெப்பப் பிரதேசத்தில் இருந்து, அதாவது ஒரு 30 - 34 பாகை வெப்பத்தில் இருந்து ஒரு 4 பாகைக்கு குறைவான உறை குளிரில் வந்து விழுந்தவர்கள் இவர்கள். ரொம்பக் கஸ்டப்பட்டுத் தங்களை முன்னேற்றிக்கொண்டவர்கள். இதனைத்தான் பிரபா சொன்னதாகச் சொல்லுவார்கள், ரொம்ப அருமையான வார்த்தை. வெளிநாட்டுக்குப்போய் என்ன பண்ணுவது என்று கேட்டதற்கு, பிரபா சொன்னாராம், ‘அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது’ என்று. அவர்களுக்கு வேறு வேலை இருக்கின்றது என்பதை உணர்ந்து, இந்தப் புலம்பெயர்ந்த சொந்தங்கள் தங்களுக்காகப் போராடிய இயக்கத்துக்கு முதுகெலும்பாக இருந்தார்கள் என்பதே உண்மை. அந்த இயக்கத்துக்கு இவர்கள் முதுகெலும்பாக இருந்தார்கள். தாய்த் தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் இப்பிரச்சினையை சரியாக எடுத்துச் செல்லத் தவறிய நிலையில், ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கவில்லையென்றால், யார் அதைத் திரும்பிப்பார்க்கின்றார்கள் என்றால், புலம்பெயர்ந்த சொந்தங்களால்தான், நடந்த இனப்படுகொலை அம்பலமாகிவருகின்றது. நீதி கொடுத்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர் சொந்தங்கள்தான் காரணம், இதனை மறுக்கமுடியாது.
புலம்பெயர் சொந்தங்களுக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். நம்பிக்கையுடன்தான் பிரபாகரன் இயக்கத்தை ஆரம்பித்தார். நம்பிக்கையுடன்தான் விடுதலைப் புலிகள் போராடினார்கள். உறுதியாக நம்புகிறோம் நாங்கள். ஈழம் கிடைப்பதை எவராலும் தடுக்கமுடியாது. ஈழம் நிச்சயம் அமையும். ஈழம் கிடைப்பதையும் எமக்கு நீதிகிடைப்பதையும் எவராலும் தடுக்கமுடியாது.
ஈழம் அமையும்போது, எப்படி நீங்கள் போராட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்தீர்களோ, நிறைய வசதிகள் இல்லாத வன்னி மண்ணுக்கும், ஈழமண்ணுக்கும் நீங்கள்தான் முதுகெலும்பாக இருக்கவேண்டும். நீங்கள் உழைத்து உருவாக்கிய செல்வங்கள் அனைத்தும் உங்களுடைய தாய் மண்ணுக்குப் பயன்படட்டும். ஒரு சிங்கப்பூர் போன்று குறுகிய காலத்தில், ஈழத்தை உங்களால் மாற்றிவிடமுடியும். ஏனென்றால், நியாயமானவர்கள், நேர்மையானவர்கள்தான் ஆட்சியை நடத்துவார்கள். அவர்கள் மூலம் என்னசெய்யமுடியுமோ நீங்கள் செய்யமுடியும். அன்று சிங்கப்பூர்மாதிரி ஈழம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதை கூறிநிற்கின்றேன், நன்றி வணக்கம்!
(நிறைவு பெற்றது)
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment