May 22, 2014

த.தே.ம முன்னனியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரனுக்கு புலனாய்வுத்துறை அச்சுறுத்தல்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரன் அவர்களின் வீட்டுக்குச் சென்று சிறீலங்கா இராணுவ புலனாய்வுத்துறை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை சுவீகரித்துள்ள சிறீலங்கா இராணுவம் அப் பகுதி மக்கள் மீள்குடியேற தடையை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், கிளிநொச்சியில் சிறீலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கான நிலங்களை விடுவிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கள் கிழமை காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரன் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினை அனுப்பியிருந்தார்.
இந் நிலையில், இன்று வியாழக்கிழமை மதியம் திருநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சிவில் உடையில் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர் தம்மை சிறீலங்கா இராணுவ புலனாய்வுத் துறையினர் என அடையாளப்படுத்தி ஜெகதீஸ்வரன் எங்கே? என்ன செய்யப் போறார்? எப்ப வருவார்? என அச்சுறுத்தும் பாணியில் அவரது வீட்டாரிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment