July 27, 2016

அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது! - நீதிபதி எச்சரிக்கை !

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண சபை தேர்தல் பரப்புரையின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் சந்தேக நபருக்கு நேற்று பிணை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன், அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.


இந்தச் சம்பவத்தில் சந்தேக நபரான வேட்பாளராகிய குமார் சர்வானந்தன் என்பவர் 18.03.2016ஆம் திகதி கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவரை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியன், நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

இந்த பிணை தொடர்பிலான தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிடுகையில், ‘துப்பாக்கியுடன் நடமாடும் அரசியல்வாதிகளுக்கு பிணை வழங்குவதில் கடினமான போக்கை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும். தேர்தல் பரப்புரையின்போது, மக்கள் முன்னிலையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இலகுவில் பிணை வழங்கப்படக் கூடாது. தேர்தல் காலத்தில மக்கள் மத்தியில் ஜனநாயகம் பேசிக்கொண்டு, மோதல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு பிணை வழங்கக் கூடாது. ஜனநாயகம் என்ற போர்வையில் யாழ் குடாநாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை இனிவரும் காலங்களில் அனுமதிக்க முடியாது.

கடந்த 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் போர் முடிவடைந்ததன் பின்னர் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது, போர் முடிவடைந்ததன் பின்னர் அரசியல்வாதிகள் தங்களுடைய பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கான தேவையுமில்லை. அப்படிப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது. ஆயினும் இந்த வழக்கில் வேட்பாளர்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட இரு வேட்பாளர்கள் குழுக்களில் ஒன்றாகிய மற்றைய குழுவின் நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கியுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு, தீர்ப்புக்கள் இயலுமானவரை சமத்துவமாகப் பேணப்பட வேண்டும். இரண்டு தரப்பினருக்கிடையே பாரபட்சம் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் நிபந்தனைகளுடன் சந்தேக நபரைப் பிணையில் செல்ல இந்த நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஐம்பதினாயிரம் காசு பிணையுடன், 2 சரீரப் பிணைகளில் கையொப்பமிட வேண்டும். அத்துடன் மாதத்தில் ஒரு தடவை நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் சந்தேக நபர் கையொப்பம் இட வேண்டும். அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. சாட்சிகளுடன் எந்தவிதத் தலையீடும் இருக்கக் கூடாது. அவ்வாறு தலையீடு இருப்பின் பிணை ரத்துச் செய்யப்பட்டு, சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார்’ என நீதிபதி தனது பிணை தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேட்பாளர்களுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் இரண்டு வழக்குகளையும் 3 மாத காலத்தில் முடிவுறுத்துமாறு சாவகச்சேரி நீதிமன்றத்திற்கும் நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment