July 7, 2016

விடுவிக்கப்பட்ட வீட்டில் குடியமர இராணுவம் தடை போடுகிறது! விதவைப் பெண்ணின் அவலம்!

கிளிநொச்சி உதயநகரில் 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வீட்டினுள் பதுங்கு குழிஇருப்பதனைக் காரணம் காட்டி இன்றுவரை எம்மைக் குடியமர இராணுவம் தடைபோடுவதாககாணி உரிமையாளர் தெரிவித்தார்.


இது தொடர்பில் காணி உரிமையாளரான 3 பிள்ளைகளின் தாயாரான திருமதி.திரேஸ் தனேஸ்குமார் தகவல் தருகையில் ,

உதயநகர் மேற்கில் வசிக்கும் நான் இறுதி யுத்தத்தில் கணவரை இழந்து 3 பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்காக சந்தையில் கடை நடாத்தியே வாழ்ந்து வருகின்றேன்.

இந்த நிலையில் எனது பூர்வீக காணியில் இருந்த வீட்டினில் முன்னர் விடுதலைப்புலிகளின் நிறுவனம் ஒன்று இயங்கியது. இதன்போது அவர்கள் ஓர் பதுங்கு குழியினை அமைத்திருந்தனர்.

மீள் குடியமர்வின்போது 2010ம் ஆண்டு எனது வீட்டில் குடியிருந்த வேளையில் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் பதுங்கு குழியினை அழிக்க வேண்டும் அதுவரை இங்கு குடியிருக்க வேண்டாம். எனத் தெரிவித்தனர்.

அதன்பிரகாரம் நான் மீண்டும் இடம்பெயர்ந்து தாயாரின் வீட்டில் சிரமத்தின் மத்தியில் 6 ஆண்டுகளாக வாழ்கின்றேன்.

குறித்த பதுங்கு குழியினை உடைத்து என்னை குடியமர அனுமதிக்குமாறு கோரி இராணுவத் தலமையகம் , மனித உரிமை ஆணைக்குழு அனைத்திலும் முறையிட்டேன்.

காலம் கடத்தப்படுகின்றதே அன்றி இன்றுவரை எந்த தீர்வும் இல்லை. இதனால். நானும் பிள்ளைகளும் மன உளைச்சலுடனேயே வாழ்கின்றோம்.

தற்போது இதனை கூறி அடிக்கடி வரும் இராணுவத்தினர் ஏதாவது காரணம் கூறுகின்றனரே தவிர பதுங்கு குழியினை இன்றுவரை அழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பில் கடந்த மாதம் வந்த இராணுவத்தினர் தாம் விரைவில் பதுங்கு குழியினை அழிக்கவுள்ளதாகவும் அதன்போது வீடும் இணைந்தே அழிக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர்.

3 பிள்ளைகளுடன் கணவர் இன்றி , இருப்பிடமும் இல்லாமல் வாழும் எனது வீட்டையும் அழித்து வெறும் கற் குவியலை வழங்கினால் நான் எவ்வாறு வாழ்வது என கோரி நிற்கின்றார்.

இது குறித்து கரைச்சிப் பிரதேச செயலாளர் நாகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

அப்பிரதேசங்கள் முழுமையாக மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் குறித்த வீடு தொடர்பில் எனது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது .

இது தொடர்பில் இராணுவத்தினருடன் பேசியபோது அவர்கள் இதனை அகற்றுவதற்கு பெரும் தொகைப்பணம் தேவைப்படுவதனால் பிரதேச செயலக ஒதுக்கீட்டில் வழங்க முடியுமா எனக் கோரினர்.

அவ்வாறான செயல்களிற்கு பிரதேச செயலக ஒதுக்கீட்டில் இடமில்லை என்பதனைச் சுட்டிக்காட்டினேன்.

தாம் அந்தப் பணியை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை இடம்பெறவில்லை. என்றார்.



No comments:

Post a Comment