July 19, 2016

தேர்தல் கால துப்பாக்கிப் பிரயோகம்: 3 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட சர்வானந்தாவுக்கு பிணை கோரி மனு. கட்டளை 25 ஆம் திகதி வழங்கப்படும் என மேல் நீதிமன்றம் அறிவிப்பு!

வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவரைக் காயப்படுத்தியதன் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக
நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை பிணையில் விடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு வரும் 25 ஆம் திகதி வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி பொது ஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களாகப் போட்டியிட்டிருந்த அங்கயன் இராமநாதன், சர்வானந்தா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் ஒன்றின்போது பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றிருந்தது.

இந்தச் சம்பவத்தில் அப்போதைய வேட்பாளராகிய அங்கயன் இராமநாதனின் தரப்பில் அவரது தந்தையார் இராமநாதன் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மறு தரப்பைச் சேர்ந்த வேட்பாளராகிய சர்வானந்தாவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அப்போது இராமநாதனிடம் இருந்து பொலிசார் அப்போது கைத்துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்

இதனையடுத்து, 1996 ஆம் ஆண்டின் சுடுபடை கலன் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழும், தண்டனைச் சட்டக் கோயின் 44 ஆம் பிரிவின் கீழும் குற்றம் சுமத்தப்பட்டு அங்கயனின் தந்தையார் இராமநாதன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு 9 நாட்களின் பின்னர் யாழ் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும் இந்தச் சம்பவத்தில் வேட்பாளராக இருந்த சர்வானந்தா மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவித்து, அதன் மூலம் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ் சுமத்தி, மூன்று ஆண்டுகளின் பின்னர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிசார் சர்வானந்தாவை கைது செய்துள்ளனர்.

கொலை முயற்சி குற்றச்சாட்டு காரணமாக சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் இருந்து வருகின்ற அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் எனக் கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பிணை மனு மீதான விசாரணையின் போது, சர்வானந்தாவின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

எனது கட்சிக்காரராகிய சர்வானந்தா ஒரு நோயாளி. அவர் மூன்று மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அவசியமாக உள்ளது,

அத்துடன் இந்தத் துப்பாக்கிப் பிரயோக மோதல் சம்பவத்தில் எதிர்த் தரப்பைச் சேர்ந்த இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியொன்று அப்போது கைப்பற்றப்பட்டிருந்தது.

அந்தத் துப்பாக்கி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக பகுப்பாய்வுக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராமதாதன் 9 நாட்களில் விளக்கமறியலில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்தினால் பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டு விட்டார்.

தேடப்படவும் இல்லை. மறைந்து வாழவுமில்லை

ஆனால் பொது ஜன ஐக்கிய முன்னணியில் இருந்து மூன்று வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட சர்வானந்தா மூன்று மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.

எனவே துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராமநாதனை 9 நாட்களில் பிணையில் செல்ல அனுமதித்த இந்த நீதிமன்றம், மூன்று மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வரும் சர்வானந்தாவை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

பொது ஜன ஐக்கிய முன்னணியில் வடமாகாண சபைத் தேர்தல் பரப்புரையின் போது வேட்பாளராக இருந்த போதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், எனது கட்சிக்காரராகிய சர்வானந்தா, தற்சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக மாறியுள்ளார்.

இதன் பின்பே சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகளின் பின்னரே அவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்த 3 ஆண்டு காலப்பகுதியில் அவர் பொலிசாரினால் தேடப்படவில்லை. அவர் தலைமறைவாக வாழவும் இல்லை. சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகாமையிலேயே தனது அலுவலகத்தை வைத்திருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் யாழ் மாவட்டத்தில் அவர் அபேட்சகராகப் போட்டியிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல், அவர் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினராக இருந்து பிரதேச சபை கலைக்கப்படும் வரையும் உறுப்பினராகக் கடமையாற்றியுள்ளார். எனவே கொலை முயற்சி குற்றச்சாட்டிற்காக அவர் தேடப்பட்டிராத நிலையிலேயே  3 ஆண்டுகளின் பின்னர்தான் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

முன் பிணை கோரியிருந்த நிலையிலேயே கைது

அத்துடன் அவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த முன்பிணை மனு ஆதரிக்கப்பட்டு, யாழ் பொலிசாருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அந்த முன் பிணை மனு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைக்காகக் காத்திருந்த போதே சர்வானந்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்;பட்டிருந்தார்.

இதன் மூலம் பொலிசார நீதிமன்ற நடவடிக்கையில் தலையீடு செய்திருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.சர்வானந்தா மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதவான் நீதிமன்றத்தில் அவர் சார்பில் பிணை மனு தாக்கல் செய்ய முடியாது என்பதற்காகவே மேல் நீதிமன்றத்தை அவர் நாடியிருக்கின்றார்.

முன்னர் பொது ஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினராக இருந்த சர்வானந்தா இப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறியுள்ளார் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்து, ஓர் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் என்பதற்காக அவரைத் தொடர்ந்து விளக்க மறியலில் வைத்திருக்க முடியாது என்பதையும் கருத்திற் கொண்டு, அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என சர்வானந்தாவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி வாதம் புரிந்தார்.

எனினும் அவரை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது என அரச சட்டவாதி நீதிமன்றத்தில் எதிர் வாதம் செய்தார்.

‘கொண்டாட்டம் நடைபெறும் குழப்பமும் ஏற்படும்’

சர்வானந்தா மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்திருக்கின்றார் என்பதை நீதிமன்றம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்தக் குற்றச் செயல் கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த போதிலும், இந்;த சந்தேக நபர் சர்வானந்தா அரசியலில்  ஈடுபட்டிருந்த பிரதேசத்தில் நிலவிய அரசியல் செல்வாக்கு மற்றும் அழுத்தம் காரணமாகவே, 2016 பங்குனி வரை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கைது செய்யப்படாதிருந்தார்.

இவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படின், சிறைச்சாலையில் உள்ள வைத்தியர் மூலமாக சிகிச்சை பெற முடியும். அல்லது சிறைச்சாலை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில்  சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு சந்தர்ப்பமும் உண்டு.

இவரை பிணையில் விட்டால் அரசியல் ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டங்களும் குழப்பகரமான நிலையும் எற்படுத்தப்படும் என பொலிசாரினால் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, எனவே இவருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதாக அரச சட்டவாதி தெரிவித்தார்.

இரு தரப்பு நியாயங்களையும் வாதங்களையும் செவிமடுத்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த பிணை மனு மீதான கட்டளை 25.07.2016 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்து விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment