June 24, 2016

வட்டுக்கோட்டைக்கு போகும் வழியைக் கேட்டால் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” என்கிறார் சி.வி!

வவுனியாவில் பொருளாதார மையம் நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை இன்னும் தொடர்கின்றது.
இந்தத் திட்டத்துக்கென அரசாங்கம் பல கோடி ரூபா ஒதுக்கியுள்ள போதும், அதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருபுறமும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாய வர்த்தக சங்கங்கள் மறுபுறமும் நின்று கயிறிழுப்பை நடாத்தி வருகின்றனர்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தாண்டிக்குளமே பொருத்தமான இடமென தீர்மானிக்கப்பட்டு, ஏகமனதாக முடிவும் செய்யப்பட்டு உரிய இடம் அடையாளம் காணப்பட்டது.

திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் முயற்சிகளுக்கு பின்னர் முதலமைச்சர் தடைக்கல் போட்டார்.

பொருளாதார மையத்துக்கு தாண்டிக்குளம் பொருத்தமற்ற இடமென அவர் அறிவித்த போதும் அதற்கான வலுவான காரணங்களை வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன், கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத்தின் முயற்சியினால், அமைச்சர் ஹரிசனின் உதவியுடன் வவுனியாவுக்குக் கிடைத்த இந்தப் பேரதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் பிரதான மத்திய இடமான வவுனியாவில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் செறிந்தும், பரவலாகவும், ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதார மையம் வவுனியாவில் அமைவதன் மூலம், அந்தப் பிரதேசம் மாத்திரமல்ல, அதனைச் சூழவுள்ள அனைத்து மாவட்ட மக்களும் நன்மை பெறுவர் என்பது வெள்ளிடைமலை.

ஆனால், இந்த முயற்சிக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டுக்கட்டையாக இருப்பதன் மர்மம்தான் என்ன? இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இது தொடர்பில் அமைச்சர்களான ஹரிசனுடனும், றிசாத் பதியுதீனுடனும் முரண்பட்டார்.

இந்தப் பிரச்சினைக்கு றிசாத்தே மூலகாரணம் என கொதிப்படைந்த விக்னேஸ்வரன் ஐயா, வட்டுக்கோட்டைக்கு போகின்ற வழியைக் கேட்டபோது, “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” என்ற பாணியில் அங்கே பதிலளித்தார்.

வடமாகாணத்தின் ஒரேயொரு கெபினட் அமைச்சரான றிசாத் இந்த மாகாணத்தின் மேம்பாட்டுக்கு என்ன செய்தார் என்பதும், வடமாகாண சபை பதவியேற்ற பின்னர் இந்த மாகாண மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்பதும் மக்களின் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும்.

றிசாத் வன்னி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக மட்டும் பாராளுமன்றத்தில் செயற்படவில்லை. 1990ம் ஆண்டு வட புலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, துன்பங்களுடனும், துயரங்களுடனும் வாழ்க்கை நடாத்தி வரும் முஸ்லிம்களின் நல உரிமை காக்க போராடுகின்றார்.

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதற்கான பணிகளையும் அவர் முன்னெடுத்து வருவதால் இனவாதிகள் அவரை குறிவைத்து தாக்குகின்றனர்.

இந்த வகையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண அரசு எந்த உதவியையோ, ஒத்தாசையோ இன்று வரை வழங்கவில்லை.

அத்துடன் இந்த மக்களின் புனர்வாழ்வுப் பணிக்கென மாகாண அரசு, மலசலகூடம் ஒன்றைத்தானும் கட்டிக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எந்தவொரு சபை அமர்விலும் மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுமில்லை. அது தொடர்பில் வாய் திறக்கவும் இல்லை.

வடமாகாண அரசின் இந்தப் பாரபட்ச நடவடிக்கைகளை பாராளுமன்றத்திலும், அரச உயர் கூட்டங்களிலும் அமைச்சர் றிசாத் புட்டு வைத்ததன் வெளிப்பாடே, றிசாத் மீதான இந்தக் குரோதங்களுக்கு காரணாமாக இருக்க முடியும்.

அத்துடன் அரசியல் ரீதியில் றிசாத் நன்மை பெற்றுவிடுவார் எனற அச்சமும் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தங்களுக்கு இருக்கும் அற்ப சொற்ப அதிகாரங்களை வைத்துக்கொண்டு, வடக்கு முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வரும் வடமாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதைக் கூறவேண்டிய அவசியம் இல்லை.

இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் ஒன்றை வடமாகாண சபையில் நிறைவேற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த மாகாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு தொடர்பில் இற்றைவரை வாய் திறக்க மறுப்பதேன்? இதுவா அவரது அரசியல் சாணக்கியம்?

வடமாகாண சபை அண்மையில் நிறைவேற்றிய அரசியலமைப்பு நகல் யோசனையில் முஸ்லிம்கள் தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

“இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கென தன்னாட்சி அதிகாரம். மலையகத்தில் செறிந்து வாழும் சுமார் 09 லட்சம் தமிழ் மக்களுக்கு சுய பிராந்தியம்” எனக் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் தொடர்பாக இவர்கள் குறிப்பிட்ட அதிகார அலகு “வேலிக்கு ஓணான் சாட்சி” போலானது. முஸ்லிம் அரசியல்வாதிகளையோ, சிவில் அமைப்புக்களையோ கலந்தாலோசனை செய்யாது, அவர்களுக்கென அதிகார அலகொன்றை வழங்குவதற்கு, வடமாகாண சபைக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? என்பதுதான் முஸ்லிம்களின் இன்றைய கேள்வி.

அதுமட்டுமன்றி வடக்கு, கிழக்கு பிரிந்தால் அல்லது இப்போது உள்ளபடியே இருந்தால், முஸ்லிம்களின் நிலை என்ன? அத்துடன் வடக்கு கிழக்கு வெளியே வாழும் சுமார் 13 லட்சம் முஸ்லிம்களின் கதி என்ன?

இந்தக் கேள்விகளுக்கு வடமாகாண சபையிடம் எந்தப் பதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. அரைவேக்காட்டுத்தனமான இந்த அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு, முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டுமென வடமாகாண சபை கோருவது நியாயமா?

ஆக, வடமாகாண சபை அங்கு வாழும் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment