July 26, 2016

மணி விழா காணும் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தமும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும்!

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ஜூலை 26, 1957 அன்று கைச்சாத்திடப்பட்டது.


இன்றோடு ஐம்பது வருடங்களை இந்த ஒப்பந்தம் கடந்து அறுபதாவது வருடமான, மணி விழாவைக் காணுகின்ற போதும் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எவையும் காணப்படாத நிலையே நீடிக்கிறது.

மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்களை அன்று நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுத்திருக்க மாட்டார்கள் என்றும் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் என்றும் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஒரு நிகழ்வில் உரையாற்றுகையில் கூறினார்.

இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு வகையான வன்முறையற்ற போராட்டங்களில் ஈடுபட்ட வேளையில் அவர்களை சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

இதில் குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கைத் தீவில் நிலவும் இன சமத்துவமின்மையை, சிறுபான்மை இனங்கள் எதிர்கொண்ட சூழலை முடிவுக்கு கொண்டுவரும் என நம்பப்பட்ட இந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட நிகழ்வு இரு இனங்களுக்கு இடையிலும் மேலும் விரிசலை ஏற்படுத்தி தமிழ் மக்களை தனி நாடு கோரிய பயணத்திற்கும் தள்ளியது.

இவ்வாறான தோல்வியில் முடிந்த ஒப்பந்தங்களின் வரலாறுகள் கற்றுத் தந்த பாடம் என்பது மிக முக்கியமானது. இத்தகைய ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தி சமாதான வழிகளில் இனப்பிரச்சினையை தீர்த்திருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் பிரிவுகளும் தடுக்கப்பட்டிருக்கும்.

அன்றைக்கு இந்த ஒப்பந்தங்களை எதிர்த்தவர்கள் போன்று என்றும் தமிழர் தரப்பை புறந்தள்ளும், ஒடுக்கும், உரிமையை மறுக்கும் கடும்போக்காளர்கள்உள்ளனர். இத்தனை அனுபவங்களையும் வரலாற்றையும் கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் அழிவுகளிலும் இழப்புக்களிலும் அரசியல் செய்து சுவைப்பவர்கள் என்றே கூற வேண்டும்.

இலங்கையில் இனப்படுகொலைகளும் ஒப்பந்தங்களும் மணி விழாக்களை காணுகின்ற இந்தக் காலத்திலாவது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையிலாவது தமிழ் மக்களின் அபிலாசைகளை சிங்கள தேசம் ஏற்றுக் கொண்டு வரலாற்றை புதிய திசையில் நகர்த்த வேண்டும். 

No comments:

Post a Comment