வலி காரணமாக, பேரறிவாளனுக்கு அரசு மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், சிறுநீரகத் தொற்றுக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்னை- புழல் சிறைக்கு ஜூன் 7ம் தேதி மாற்றப்பட்டார்.
ஜூன் 8, 11, 18 ஆகிய தேதிகளில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், ஜூன் 19, 22 ஆகிய தேதிகளில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அவருக்கு சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுநீரகத் தொற்றின் பாதிப்பு குறைந்து விட்டதாகவும், அவர் மருந்துகளைத் தொடர அவசியம் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து புழல் சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் வலி ஏற்படுவதாகக் கூறியதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கொண்டு வரப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோ கூறியது:
பேரறிவாளனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூன்று நாள்களுக்கு குறிப்பிட்ட மருந்தை ஊசியின் முலம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அதற்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கவும் பரிந்துரைத்துள்ளனர் என்றார்.
இதைத் தொடர்ந்து பேரறிவாளன் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்று புதன்கிழமை அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment