May 19, 2014

தமிழின அழிப்பு நாள் மே 18 - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!


அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று, தமிழ் இனவழிப்பின் பலியாட்களாக நூறாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்
மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்  தமிழின அழிப்பு  நாளின் 5ஆவது ஆண்டை நாம் நினைவேந்திக் கொண்டிருக்கிறோம். 

இந்த நாள், தமிழின வரலாற்றிலே மிகக் குறுகிய மாதங்களில் சிறிலங்கா அரச படைகளின் அதி உச்ச சூட்டு வலுவைக் கொண்டும், திட்டமிட்ட பட்டினிச் சாவை ஏற்படுத்தியும், காயப்பட்ட மக்களுக்கான மருந்துப்பொருள் விநியோகத்தைத் தடுத்தும் 150 000 வரையான தமிழர்கள் மிகக் கொடூரமாக வதைத்துக் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நாள். எமது தேசியத் தலைவரால் நிறுவப்பட்ட தமிழீழ நிழல் அரசாட்சிக்குள் சுதந்திரக் காற்றை சுவாசித்து இறுதிவரை அந்த மண்ணிலே வாழ்ந்து மடிந்த, தேசிய விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாக நின்று உயிரூட்டம் தந்த அந்த மக்களை, அந்த மக்களின் ஆன்மாக்களை எங்கள் நெஞ்சப் பசுமையில் நிறுத்தி அஞ்சலி செய்கின்ற ஒரு வரலாற்று நினைவு நாள் இன்று.  

கடந்த 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2009 ஆம் ஆண்டிலும், மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாகக் கூறி உலகத்தை ஏமாற்றிக்கொண்டு, 'போர் தவிர்ப்பு வலயம்' என்னும் ஒரு கொலைக் களப் பொறியை ஏற்படுத்தி அங்கு எமது மக்கள் மிகச் சாதாரணமாகக் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் தமிழர்கள். மனிதகுலத்துக்கு எதிரான இந்தக் குற்றமானது மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு ஒரு குறிக்கோளுக்காகவே இழைக்கப்பட்டது.

அதாவது, தமிழீழத் தேசிய எழுச்சி உணர்வுகொண்ட தமிழ் மக்களுள் பெரும்பாலானோர் அங்குதான் இருந்தார்கள் என்ற காரணத்தால் அந்த மக்கள் குழுமத்தை அழித்தல், அந்த மக்களில் பெருந்தொகையானோரைப் படுகொலை செய்வதன் மூலம் அவர்களின் சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடைய வைத்தல், அதன்பின்னர் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் வழங்காது வரலாற்றுக்கு முற்பட்ட பூர்வீகத் தமிழர் தாயகத்தை முற்றுமுழுதாக ஆக்கிரமித்தல், அவ்வாறான தேசிய எழுச்சிகொண்ட மக்களுக்கு உடல் உளவியல் ரீதியாகப் பாரதூரமான தீங்கிழைப்பதன் வாயிலாகத் தாயகத்தை விட்டு அவர்களை வெளியேற்றுதல் அல்லது அடிமைப்படுத்தல், பின்னர் திட்டமிட்ட மென்தீவிர இனக்கலப்பு ஊடாகப் படிப்படியாக இலங்கைத் தீவில் தமிழரின் அடையாளங்களான - மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தேசிய வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றை - அழித்தல், தொடர்ந்து இவ்வாறாகப் பல வருடங்களுக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தீவையும் முழுமையான தனிச் சிங்கள பௌத்த தேசமாக்குதல் என்பதே அந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையான குறிக்கோளாகும். அதுவே தாயகத்தில் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள் சுட்டிநிற்கின்றன.

இறுதிப் போரிலே 70,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. முல்லைத் தீவு மாவட்டத்;தில் மட்டுமே உள்ளக இடம்பெயர்ந்தோர் விபரம் 360,000 சனத்தொகை என ஒர் அரச அதிகாரி பதிவுசெய்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலப்பரப்பானது முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதோடு, ஏனைய கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலிருந்தும் கணிசமானளவு மக்கள் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்றிருந்தனர். 

ஒக்ரோபர் 2008 இல் வன்னி மக்களின் மொத்த சனத்தொகை 429,000 என்ற கணிப்பீட்டை மற்றுமொரு அரச கிராம சேவகர் பதிவுசெய்துள்ளார். அதேவேளை, அங்கே 350,000 சனத்தொகை இருந்ததாக ஐ.நா. நம்பியதாகத் தெரிவிக்கிறது. ஆனால், ஐ.நா.வின் உள்ளகப் பொது அறிக்கைகள் 150,000 இலிருந்து 350,000 வரையான சனத்தொகையென ஒரு குறைவான மாறுபட்ட விபரத்தைத் தெரிவித்தன. இவையனைத்தையும் மறைத்த சிறிலங்கா அரசு அங்கே போர் தவிர்ப்பு வலயத்துள் 70,000 சனத்தொகைதான் இருந்தனர் என உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருந்த வேளை, இறுதிப் போருக்குப் பின்பு 280,000 பொதுமக்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர் என்ற உண்மையானது, அங்கே சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட பொதுமக்களைப் படுகொலை செய்யவேண்டுமென்ற உத்தேசத்தை தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால், எம்மைப் பொறுத்தவரை 2006 இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் புலிகளை உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 500,000  சனத்தொகை இருந்ததாக அன்று பேசப்பட்டது. ஒரு ஐயப்பாட்டில் உண்மையான சனத்தொகை மதிப்பீட்டை சில தரப்புக்கள் குறைத்துப் பதிவிட்டுள்ள நிலை ஒருபுறமிருக்க, ஐ.நா.வின் குறைவான சனத்தொகை மதிப்பீடு என்பது சர்வதேசம் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறையின்மையை தெளிவாகச் சுட்டிநிற்கிறது. ஏனெனில் 2006 இல் ஆரம்பித்து 2009 வரையான 3 வருடகால தொடர்ச்சியான நீண்டகாலப் போரின்போது அங்கே போரில் சிக்கித்தவித்த மக்களின் ஒரு சரியான சனத்தொகையைக் கூட இந்த உலகம் கணக்கிடத் தவறியிருப்பதை நாம் உணர்ந்துள்ளோம். மாறாக, வன்னியில் நிலைகொண்டிருந்த ஐ.நா. மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தமிழ்மக்களைப் படுகொலைப் பொறிக்குள் தவிக்கவிட்டு அங்கிருந்து வெளியேறிய ஒரு வரலாற்றையும் நாம் பார்க்கிறோம். இதன் விழைவாக அங்கே 150,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமற் போயினர் எனபதே சரியான ஒரு மதிப்பீடாக தமிழ் மக்களால் நம்பப்படுகிறது.

இவ்வாறு உலகத்தால் கைவிடப்பட்டு, சிறிலங்கா இனவழிப்பு அரசின் கொடுமைகளுக்கு அஞ்சி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று தஞ்சமடைந்த அந்த மக்களைப் பாதுகாப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னேறிவரும் இனவழிப்பு சிங்களப் படையை எதிர்த்து அந்த மக்களின் கவசமாக, பாதுகாப்பு அரணாக நின்று தமது சக்திக்கு உட்பட்டு இறுதிவரை போராடினார்கள் என்பதே உண்மையான பதிவு. சர்வதேச நாடுகளின் சகல ஒத்துளைப்புகளோடும் தனது அரசாட்சிக்குட்பட்ட அனைத்து கூட்டுவளங்களையும் ஒன்றுதிரட்டி சுயநல அரசியலுக்காக ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கோடு எமது தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்து முன்னேறிய சிங்களத்தின் வரலாறுகாணாத தமிழின அழிப்புப் போரை எதிர்த்து எந்த நாட்டின் ஆதரவுமற்று தமிழீழ விடுதலைப் புலிகள் எமது மக்களின் பலத்தோடு மட்டுமே தனித்து நின்று களமாடினார்கள். 

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்து இன்றுடன் 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற நயவஞ்சகப் பொய்ப் பரப்புரை ஊடாக சிங்கள இனவாத அரசு சர்வதேச சமூகத்தை இன்றளவும் தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற ஒரு வரலாறு தொடர்ந்துகொண்டே செல்கிறது. நாட்டின் இறைமையுள்ள அரசாங்கம் என்ற செல்வாக்கு அலகுகளுக்கு ஊடாக, ஒரு இனத்தை அழித்தொழிப்பதற்காக நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்கு வேண்டுமான சட்டங்களை உருவாக்கி, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை அதன் சட்டங்கள் ஊடாக நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் பழிவாங்கல் செயற்பாட்டை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், அந்த சட்டங்கள் வாயிலாக குற்றங்களைப் புரிகின்ற சிங்கள இனவாதிகள் காப்பற்றப்பட்டு, அப்பாவித் தமிழர்கள் தண்டிக்கப் படுகிறார்கள். தமிழினத்தை அழிப்பதற்காக எம்மீது  பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, 'புலிகளின் மீழுருவாக்கம்' என்ற ஒரு விம்பத்தை உருவாக்கி, எமது மக்களுக்கான நீதியின் குரல்களாக விளங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு மோசமான குற்றமாகும்.

அன்பான மக்களே,
மே - 18 என்பது 'தமிழ் இனப்படுகொலையின்' ஒரு குறியீட்டு நாள். தமிழர் இனப்படுகொலை ஒரே நாளில் நிகழ்த்தப்பட்டதல்ல என்பது யாவருக்கும் வெளிச்சம். அது கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் 60 ஆண்டுகளாக நடைபெற்று, முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தில் அதன் உச்சத்தைத் தொட்டு,  இன்றளவும் ஐந்து ஆண்டுகளாக ஒரு முடிவற்றுத் தொடர்ச்சியாக நீடித்துச் செல்கிறது. மேலும், சிங்களப் பேரினவாத அரசுகள் குற்றத்தை முற்றுமுழுதாக மறுத்துவரும் அதன் கொள்கை தொடரும்வரை, ஒரு இனக்குழுமத்தை அழித்த நாளை அறிவீனமாகத் தமது வெற்றி நாளாகக் கொண்டாடுகின்றவரை தமிழினம் மீதான இனப்படுகொலையின் உயிர்ப்பு தொடரவே செய்யும். 

ஒரு குற்றத்தை மறைப்பதே அதன் அசல் குற்றத்தின் நேரடித் தொடர்ச்சி என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். குற்றத்தைக் கண்டறிந்து தண்டிப்பதன் வாயிலாகவே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியும். ஆகவே, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு ஒரு வலுவான சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்கி, குற்றத்தை கண்டறிந்து அதற்கான தண்டனைகளை வழங்குவதோடு, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்குமாறு தமிழ்மக்கள் சார்பாக நாம் இன்றைய நாளில் சர்வதேச சமூகத்தை அன்போடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். 

அதுவரைக்கும் தமிழர்களது சுதந்திரத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஒருபோதும் தணியாது என்பதைக் கடந்தகால வரலாறுகள் ஊடாக சர்வதேச சமூகம் புரிந்து செயலாற்ற வேண்டுமென்பதையும் நாம் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம். 
இதுவரை காலமும் தமிழ் இனப்படுகொலைக்குப் பலியான பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை நாம் சிரம்தாழ்ந்து வணக்கம் செலுத்தும் இந் நாளில், ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, கொண்ட கொள்கையில் இறுதிவரை உயிர்மூச்சாகக் கொண்டு போராடிக் களப்பலியான மாவீரர்களை இந்நாளில் எங்கள் நெஞ்சங்களில் நினைவுகூர்ந்து,  

அவர்களின் கனவை நனவாக்கப் புதுவிதி செய்வோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'

நன்றி.
இவ்வண்ணம்,
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.1.10.3 Hyacinthe

No comments:

Post a Comment