February 9, 2015

அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ரணில் எச்சரிக்கை!

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் படியும் அவர், ஐதேக செயற்குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஆதரவாக, 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணை எதிர்க்கட்சியினரால் நாடாளுமன்ற செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பர் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்படியும், சபாநாயகரிடம் ரணில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் செனிவிரத்ன, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை என்றும், அது சிறிலங்கா அதிபரிடமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment