June 13, 2016

35 தமிழ் அகதிகளுடன் இந்தோனேசியக் கடலில் தத்தளித்து அவுஸ்திரேலியாவை நோக்கி நகரும் படகு!

சுமத்திரா தீவின் அருகே படகு பழுதானதால் தவித்த கொண்டிருந்த 35 தமிழ் அகதிகளை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அந்த படகு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி பயணமாவது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை படகில் என்ஜீன் கோளாறானதாலும் கடுமையான காற்றினாலும் லோஹ்ங்க கடற்கரையிலிருந்து (Lhoknga beach) 300 மீட்டர் தொலைவில் படகு நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்திய கொடியேந்திய அப்படகில் 17 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 35 இலங்கை தமிழ் அகதிகள் இருந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணங்கள் இவர்களிடம் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. ஏசெஹ்(Aceh) மாகாண குடிவரவுத்துறை தலைமை அதிகாரி,படகில் உள்ள தமிழ் அகதிகள் இந்தோனேசிய கரைக்கு வர மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

படகு என்ஜீனை சரிசெய்து கொடுக்கும்படி அகதிகள் கேட்டதை அடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு படகு விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய கடற்பிரதேசத்திலிருந்து சர்வதேச கடற்பரப்பு அடையும் வரை, அப்படகுக்கு இந்தோனேசிய பாதுகாப்பு படை சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் சில நாட்களில் தமிழ் அகதிகளை கொண்ட படகு ஆஸ்திரேலியாவை அடையும் என நம்பப்படுகிறது. படகில் உள்ளவர்கள் ஆரோக்கியத்துடனும் போதுமான உணவுப்பொருட்களுடனும் இருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தமிழகத்தின் பழவேற்காடு, கல்பாக்கம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த அகதிகளை, ஏஜெண்டுகளை காவற்துறை கைது செய்திருந்தனர். இப்படகில் உள்ளவர்களும் அந்த வேளையில் தப்பிய அகதிகளாக தான் இருக்கக்கூடும் என எண்ணப்படுகிறது.

கடந்த மாதம் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் கொகோஸ் தீவை அடைந்த படகு அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டது. கடல் வழியாக புகலிட கோருபவர்களுக்கு கடுமையான விதிகளை ஆஸ்திரேலிய அரசு பின்பற்றுகிறது. இதை மீறியும் ஆஸ்திரேலியா சென்றடைபவர்களை தனித்த விடப்பட்ட தீவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கோ அல்லது வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புகிறது அந்நாட்டின் குடிவரவுத்துறை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை நோக்கி பயணமாகின்றனர் 35 தமிழ் அகதிகள். இது தொடர்பாக அரசு என்ன முடிவு போகிறது எனத் தெரியவில்லை என்று அச்சப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.







No comments:

Post a Comment