June 15, 2016

பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெறத் தவறியுள்ளது இலங்கை அரசு! - முன்னாள் ஐ.நா அதிகாரி குற்றச்சாட்டு!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியிருப்பதாக ஐ.நாவின் முன்னாள் உயர் அதிகாரி டேவிட் வெய்லி கடுமையாக சாடியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுவீச்சில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் பின்னிற்பதாகவும் டேவிட் வெய்லி தெரிவித்துள்ளார்.

 
ஐ.நா தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருக்கக்கூடிய விருப்பத்தினை இலங்கை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனால் தனது இந்தக் கடப்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆளுமையினை அது வெளிக்காட்டவில்லை. அண்மையில் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்து அவர்களுடன் கலந்துரையாடிய பலருடன் நான் கலந்துரையாடியிருக்கிறேன். களத்தில் நிலைமைகளில் மிகச் சொற்பமாற்றங்களே ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாகக் காணாமற்போன, பலவந்தமாகக் காணாமற்போனோருக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் அவர்களுக்குத் தெரியாது. இராணுவத்தினரின் தொடர்ச்சியான இராணுவ அச்சுறுத்தல்கள், புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் செறிவான இராணுவப் பிரசன்னம், பாடசாலைகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற சிவில் நடவடிக்கைகளில் படையினரின் தலையீடு, பொதுமக்களின் காணிகளில் படையினர் நிலைகொண்டுள்ளமை போன்ற எந்த நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை.

புதிய அரசின் மீது வடக்கு, கிழக்கு மக்கள் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்தும் வகையில் புதிய அரசின் செயற்பாடுகள் அமையவில்லை. இந்த முக்கிய செய்தியை இலங்கை செவிசாய்க்கும் என நான் நம்புகிறேன். ஆனாலும், ஏனையோருடன் ஒப்பிடும்போது நான் சற்று வித்தியாசமான கருத்தினைக் கொண்டிருக்கிறேன். அதாவது இந்த அரசிற்கு ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றும் விருப்பு இருக்கிறது. ஆனால் அதில் அது களத்தில் கடும் எதிர்ப்புக்களைச் சந்தித்திருக்கிறது.

ஒரு அரசானது பல வாக்குறுதிகளைக் கொடுக்கலாம், அதற்கான சட்டமூலங்களையும் இயற்றலாம். ஆனால் அவற்றினை நிறைவேற்றுவதற்குப் இராணுவத்தினர் மட்டுமல்ல, புலனாய்வுத்துறையினர், பொலிசார் மற்றும் சிவில் அதிகாரிகள் போன்ற ஏனைய அரசதுறைகள் அதன் அவசியத்தினை உணரவில்லையாயின் அதனது அமுலாக்கம் என்பது மிகவும் மந்தமாகவே இருக்கும் என்பதே எனது கருத்து.

இலங்கையில் இந்த நிலைதான் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். பொதுமக்களுடனான கலந்துரையாடல் என்ற விடயத்தில் இணையத்தளமூடாக இந்தக் கலந்துரையாடல் காலஎல்லைகள் ஏதுமின்றி மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளிட்ட ஏனையோருடனான கலந்துரையாடல்கள் என்பது இன்னமும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது மிகவும் கவலைக்குரியது.

ஆகவே, இலங்கை அரசு சில காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் அவை முழுமையாக சரியான திசையில் செல்லவில்லை என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் இதனையே கோடுகாட்டியிருந்தார் என்றார்.

No comments:

Post a Comment